/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்க பட்டறையில் தீ விபத்து; உரிமையாளர் உயிரிழப்பு
/
தங்க பட்டறையில் தீ விபத்து; உரிமையாளர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 11, 2025 07:32 PM
கோவை; கெம்பட்டி காலனியில் தங்க பட்டறையில், காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.
கோவை, ராமசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 49. இவர் கெம்பட்டி காலனி, எல்.ஜி., தோட்டம் பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். பட்டறையில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
கடந்த மே 27ம் தேதி இரவு சுப்ரமணி மற்றும் சாந்தி ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து, தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி சாந்தி உடல் நலம் பெற்று வீடு திரும்பினார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி, நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.