ADDED : அக் 20, 2026 08:02 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிவம் தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவம் தியேட்டர் அருகில், ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடம் இயங்கி வருகிறது. நேற்று இந்த கூடத்தில், திடீரென எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. அதில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். சிறிது நேரத்திற்குள் தீ மள மள வென பரவி, உடற்பயிற்சி கூடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகிலேயே ஏராளமான வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் உள்ளதால், தீ மற்ற இடங்களுக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் தீ அருகில் இருந்த வீடுகளுக்கோ அல்லது வணிக வளாகங்களுக்கோ பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது. விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
