
நெ ருப்பால் அழிக்க மட்டுமல்ல...ஆக்கவும் முடியும் என்பதை, தனது ஓவியங்களால் நிரூபித்துக்காட்டுகிறார், ரத்தினபுரியை சேர்ந்த ஓவியர் வசந்தகுமார்.
முதுகலை ஓவியம் பயின்றுள்ள இவர், வண்ணங்களை குழைத்து, துாரிகையால் தொட்டு ஓவியம் வரைவது போல, இயற்கையாக கிடைக்கும் எரிபொருட்களை கொண்டு நெருப்பை மூட்டி, பற்றி எரியும் தீச்சுடர்களை பயன்படுத்தி, நெருப்பு ஓவியங்களை வரைந்து அசத்தி இருக்கிறார்.
''பள்ளியில் படிக்கும் போதே, ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். ஓவிய கல்லுாரியில் சேர ஆசை இருந்தது. ஆனால் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்சில் சேர்ந்து விட்டேன். படிப்பை முடித்த பிறகு ஓவியக்கல்லுாரியில் சேர்ந்து, முதுகலை வரை ஓவியத்தை முறையாக கற்று இருக்கிறேன்,'' என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார் வசந்தகுமார்.
அதென்ன பயர் ஆர்ட்?: ஓவியத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்து, பட்டாசு மருந்தை பயன்படுத்தி, 'பயர் ஆர்ட்' (Fire Art) வரைய முயற்சி எடுத்தேன். எனது ஓவியத்தை பார்த்த மாஸ்டர், 'நல்லா இருக்கு, கன்டினியூ பண்ணு' என்றார். இதன் பின், கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயர் ஆர்ட் வரைந்து வருகிறேன்.
நெருப்பால் எப்படி ஓவியம் வரைகிறீர்கள்?: பயர் ஆர்ட்டில் பல விதம் இருக்கிறது. ஒரு மரப்பலகையில் கேன்வாஸை ஒட்டி, அதில் ஓவியத்தை பென்சிலால் ஸ்கெட்ச் செய்து, அதில் பட்டாசு செய்ய பன்படுத்தும் மருந்து அல்லது கன் பவுடரை பயன்படுத்தி, நெருப்பால் வரைவதுதான் பயர் ஆர்ட்.
ஓவிய ரசிகர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?: கோவை, மும்பை, டில்லி போன்ற இடங்களில் என் கண்காட்சி நடத்தி இருக்கிறேன். பொதுவாக ஓவியங்களை வண்ணங்களை பயன்படுத்தி வரைவதுதான் வழக்கம். இது எப்படி சாத்தியம் என்பது போல், வியப்பாக பார்க்கின்றனர். என் ஓவியங்களை பார்த்தவர்கள், ரொம்ப வித்தியாசமாக இருப்பதாக கூறி பாராட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் பல ஓவிய கண்காட்சிகளை நடத்தி இருக்கும் இவர், இப்போது கோவை ஹோப் காலேஜில் உள்ள, டி.சி.ஆர்ட் கேலரியில், 'பயர் ஆர்ட்' (Fire Art) என்ற ஓவிய கண்காட்சியை நடத்தி வருகிறார். இந்த கண்காட்சியில், 20க்கு மேற்பட்ட நெருப்பு ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

