ADDED : ஆக 18, 2026 06:41 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் மீண்டும் தீ எரிவதால், அருகே உள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் குடோனுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பைக் கிடங்கு, சிறுமுகை சாலை நேஷனல் நகர் பகுதி அருகே, பத்து ஏக்கர் பரப்பில் உள்ளது. நகராட்சியின் 33 வார்டுகளின் ஒட்டுமொத்த குப்பை அனைத்தும், இங்கு கொட்டப்படுகின்றன. இதனருகே, 50க்கும் மேற்பட்ட வீடுகளும், கேஸ் சிலிண்டர் கிடங்கும் உள்ளன.
கடந்த வாரம் கிடங்கில் உள்ள குப்பையில் இருந்து புகை வந்தது. வீசிய காற்றால், குப்பை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அன்னுார், மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர், மூன்று நாட்கள் தீயை அணைத்தனர். நேற்று காலை மீண்டும், குப்பை கிடங்கில் உள்ள குப்பையில், தீ எரியத் தொடங்கியது. கிடங்கு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இப்புகை, அருகே உள்ள குடியிருக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பைக்கிடங்கில், காம்பவுண்ட் சுவர் அருகே பல அடி உயரத்துக்கு குப்பை குவித்துள்ளனர். குப்பையில் தீப்பிடித்து எரிகிறது. காற்று வேகமாக வீசினால் எரியும் நெருப்பு, காம்பவுண்ட் சுவரின் கீழே உள்ள குடியிருப்பு பகுதியில் பரவ வாய்ப்புள்ளது. கிடங்கில் இருந்து, சிறிது துாரத்தில் காஸ் சிலிண்டர் கிடங்கும், அப்பகுதியில் குடியிருப்பு வீடுகளும் உள்ளன. குப்பையில் எரியும் தீயால், சிலிண்டர் கிடங்குக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பையில் எரியும் தீயை அணைக்க வேண்டும். காம்பவுண்ட் சுவர் அருகே உள்ள குப்பை முழுவதையும் வேறிடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும். இப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
