/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யலில் தொடரும் வெள்ளப்பெருக்கு
/
நொய்யலில் தொடரும் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூன் 17, 2025 10:59 PM

தொண்டாமுத்தூர்; கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் மூன்றாவது நாளாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில், கடந்த நான்கு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, நொய்யல் ஆற்றில், கடந்த 15ம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்று காலை வரை, சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 124 மி.மீ., மழையும், அடிவாரத்தில், 52 மி.மீ., மழையும் பதிவாகியது. இதனால், நொய்யல் ஆற்றில், மூன்றாவது நாளாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செந்நீர் கரைபுரண்டு ஓடியது.
சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேறியது. கீழ்ச்சித்திரைச்சாவடி வாய்க்கால் மற்றும் குனியமுத்தூர் வாய்க்கால்கள் வழியாக தொடர்ந்து, கோவையில் உள்ள குளங்களுக்கு நீர் சென்று கொண்டிருக்கிறது.
பெரும்பாலான குளங்கள், அதன் கொள்ளளவில், 85 நிரம்பியுள்ளன. இதே போல் மழை தொடர்ந்தால் இன்னும், 4 நாட்களுக்குள், அனைத்து குளங்களும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.