/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டல்களில் சுகாதாரமின்றி உணவு சப்ளை; உணவு அதிகாரிகள் எச்சரிக்கை
/
ஓட்டல்களில் சுகாதாரமின்றி உணவு சப்ளை; உணவு அதிகாரிகள் எச்சரிக்கை
ஓட்டல்களில் சுகாதாரமின்றி உணவு சப்ளை; உணவு அதிகாரிகள் எச்சரிக்கை
ஓட்டல்களில் சுகாதாரமின்றி உணவு சப்ளை; உணவு அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : செப் 10, 2025 09:39 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் செயல்படும் ஓட்டல்கள் சிலவற்றில், உணவு பாதுகாப்பு சட்டங்கள், சரிவர பின்பற்றப்படுவது இல்லை, என, புகார்கள் வந்துள்ளன.
உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ், ஓட்டல்கள் நடத்த உரிமம் பெறப்படுகிறது. இதற்காக, 12 விதிகளை, அரசு வகுத்துள்ளது. இதனை நிறைவு செய்வோருக்கே உரிமம் வழங்குவதுடன், உரிமம் பெறாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், சட்டம் வழி வகுத்துள்ளது.
அதன்படி, ஓட்டல் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். மேலும், நோயுற்றவர்கள், தொற்றுநோய் உள்ளவர்கள், வெட்டுக்காயப்புண் உள்ளவர்களை உணவு சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
உணவு தயாரிக்க தரமற்ற பாத்திரங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்தல், கீற்றுக் கொட்டகை, பிற உயிரினங்கள் வசிக்கும் வகையில், சமையல் கூடம் அமைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இருந்தும், பொள்ளாச்சி நகரில், செயல்படும் ஓட்டல்கள் சிலவற்றில் சரிவர சுகாதாரம் பேணப்படுவதில்லை.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பெரும்பாலான ஓட்டல்களில், சுகாதாரம் இருப்பதில்லை. குறிப்பாக, உணவு பரிமாறுவோர், பார்சல் கட்டித் தருவோர், உணவு தயாரிப்பவர்கள் இத்தகைய விதிமீறலில் ஈடுபடுகின்றனர்.
அவ்வப்போது, உணவின் சுவையை அறிய கைகளில் கொட்டி ருசி பார்ப்பது, உடலில் கொட்டும் வியர்வையை கைகளால் துடைத்து, அப்படியே உணவுப் பொருட்களை பார்சல் செய்வது என, வாடிக்கையாளர்கள் முன்னிலைலேயே சுகாதாரத்தை மறந்து செயல்படுகின்றனர்.
பணிபுரியும் ஊழியர்கள் அடிக்கடி மாற்றப்படுவதால், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதும் இல்லை. இருமல், சளி போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவ்வப்போது பணியில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள், பெரிதும் பாதிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஓட்டல்களில் அவ்வப்போது ஆய்வு நடத்தி, உணவுபாதுகாப்பு விதிகள் மற்றும் சுகாதாரம் பேண விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், தள்ளுவண்டி கடைகள் முதல், ேஹாட்டல்கள் வரையிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பொருட்கள் வழங்குகிறார்களா என, அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்போம்,' என்றனர்.