/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு முக்கியம்
/
சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு முக்கியம்
ADDED : மார் 16, 2025 12:14 AM

சர்க்கரை நோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதங்களை பரிசோதிப்பது அவசியம் என்கிறார், இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
அவர் கூறியதாவது:
சிதம்பரத்துக்கு வயது, 45. சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இரு மாதங்களாக அவருக்குக் காலில் மதமதப்பு, எரிச்சல் இருந்தது. இது 'டயாபெடிக் நியூரோபதி' எனும் நிலை. அதாவது, சர்க்கரையால், கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு காலின் அடிப்பகுதியில் உணர்வுகள் இல்லா நிலை.
இதன் பின் இவர், கோவிலுக்கு காலணி அணியாமல், 40 கி.மீ., நடந்தார். துாசி, சிறு ஆணிகள், கற்கள், வெய்யிலால் இளகிய தாரின் சூடு ஆகியவற்றால் அவர் பாதத்தில், ஒரு பெரிய புண் ஏற்பட்டது.
நோய்க்கிருமிகளும் சேர்ந்ததால், கோவிலுக்கு செல்லும் முன்னரே, கால் மோசமாகி, குளிர் ஜுரம் ஏற்பட்டு, அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வளவு நடந்தும் அவரால் எந்த வலியையும் உணரமுடியவில்லை.
கால் புண்ணில் இருந்த நோய் கிருமிகள், ரத்தத்தில் கலந்து பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் எங்கள் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். பல மணி நேரம் போராடி, அவர் உயிரைக் காப்பாற்றினோம். ஆனால், வலது முழங்காலுக்குக் கீழ் பகுதியை இழக்க நேரிட்டது.
ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தார். செலவு ரூ.7 லட்சம். மூன்று மாதங்களுக்குப் பின் செயற்கை கால் பொருத்தினார். சிதம்பரம் ஒரு நல்ல செருப்பை அணிந்திருந்தால், இந்த பிரச்னையை தவிர்த்திருக்கலாம். காலணி இல்லால் நடக்கும் நடை, காலனை நோக்கிச் செல்லும் பயணம் என, சர்க்கரை நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்
* பாதத்தில் மதமதப்பு, எரிச்சல், குத்தும் தன்மை, பஞ்சில் நடப்பது போன்ற உணர்வு இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் மருத்துவரை அணுகவும். காலணி அணியாமல் எங்கும் செல்லக்கூடாது.
சர்க்கரை நோயாளிகள் பாத யாத்திரை, வெயில் நாட்களில் வெறும் கால்களில் நடக்க கூடாது. காலை மற்றும் இரவு, பாதத்தை சோதித்துக் கொள்வது நல்லது.
* காலில் புண் வந்தால், சுயமருத்துவம் செய்யக்கூடாது. மருத்துவரை அணுகி, அவர் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.குண்டூசி, கத்தரிக்கோல் ஆகியவற்றை காலில் பயன்படுத்தக்கூடாது. கால் நகங்களை வாரம் ஒரு முறை வெட்டி, சுத்தமாக வைக்க வேண்டும்.
* மிகச் சூடான, மிக குளிர்ந்த பொருட்கள் காலில் படாமல், கவனமாக இருக்க வேண்டும். புகை பிடிப்பதை முற்றிலும் நிறுத்தவேண்டும். புகை பிடிப்பதால், கால் ரத்த குழாய்களில் ரத்த ஓட்டம் பாதிக்கும்.