/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனிமையில் தவிக்கும் முதியவர்களுக்கு.. கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்! பாதுகாப்பு கரம் நீட்டும் மாநகர போலீஸ்!
/
தனிமையில் தவிக்கும் முதியவர்களுக்கு.. கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்! பாதுகாப்பு கரம் நீட்டும் மாநகர போலீஸ்!
தனிமையில் தவிக்கும் முதியவர்களுக்கு.. கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்! பாதுகாப்பு கரம் நீட்டும் மாநகர போலீஸ்!
தனிமையில் தவிக்கும் முதியவர்களுக்கு.. கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்! பாதுகாப்பு கரம் நீட்டும் மாநகர போலீஸ்!
ADDED : அக் 03, 2024 12:13 AM

கோவை : கோவை மாநகரில் தனிமையில் உள்ள முதியவர்களுக்கு, பாதுகாப்பு அரணாக கோவை மாநகர போலீசார் திகழ்கின்றனர். அவர்களின் தேவை எதுவாக இருந்தாலும், ஒரு போன் செய்தால் ஓடோடிச்சென்று உடனடியாக நிறைவேற்றி வைக்கின்றனர். இத்திட்டத்தால் தனியாக வசிக்கும் முதியோர் ஆசுவாசம் அடைந்துள்ளனர்.
'கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை'. முதுமையை வெல்ல துணை தேவை. கணவன், பெற்ற பிள்ளைகள் என யாராவது, உடன் இருக்க மாட்டார்களா என தவிக்கும் முதியவர்கள் பலர் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், பலர் பணிக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, தங்கள் பெற்றோர்களை பிரிந்து வேறு மாவட்டம், மாநிலம் மற்றும் வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். மேலும் சிலர், பெற்றோரை கைவிட்டு தனியாக சுயநல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி, தனிமையில் உழலும் முதியோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கைகொடுத்தார் கமிஷனர்
இந்நிலையில், கோவையில் தனியாக வசித்து வரும் முதியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இரு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாயிலாக மாநகரில் உள்ள, 4 மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, 24 போலீஸ் ஸ்டேஷன்களிலும், இதற்கென போலீசார் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தவிர்த்து, 20 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 938 தனியாக வசிக்கும் முதியவர்களை, போலீசார் அடையாளம் கண்டனர்.
தனியாக வசிக்கும் முதியவர்களை அணுகுவது எப்படி, பேசுவது எப்படி, அவர்களின் குறைகளை கேட்டறிய பொறுமையை கடைபிடிப்பது எப்படி என்றெல்லாம், போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, முதியோரை 'அப்பா', 'அம்மா' என்றுதான் அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, தனிமையில் உள்ள முதியவர்களை மாதம் ஒரு முறை கண்டறிந்து, அவர்களின் பிரச்னைகள், குறைகளை போலீசார் கேட்கின்றனர். ஆறுதல் குரல் கேட்டதும், உருகி விடுகின்றனர் முதியோர்.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மூத்த குடிமக்கள் சட்டத்தின் படி, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, போலீஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன்படி, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஒரு போலீசார் என, மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களிலும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாதம்தோறும் சென்று, முதியவர்களை சந்திந்து வருகின்றனர். தொடர்பு எண்களை அளித்து வருகின்றனர். முதியோர் சட்டம் சார்ந்த பிரச்னைகள் மட்டுமின்றி, பொதுப்பிரச்னைகளுக்கும் போலீசாரை தொடர்பு கொள்கின்றனர்.
வழக்கமாக ரோந்து செல்லும் போலீசாரும், அப்பகுதியில் உள்ள முதியவர்களை அடிக்கடி பார்த்து பேசி குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்,'' என்றார்.

