வனபத்திர காளியம்மன் கோவில்...யாருக்கு?: உரிமை கோரும் இரு ஊராட்சிகள்
வனபத்திர காளியம்மன் கோவில்...யாருக்கு?: உரிமை கோரும் இரு ஊராட்சிகள்
UPDATED : ஆக 17, 2026 04:51 AM
ADDED : ஆக 16, 2026 05:21 PM

மேட்டுப்பாளையம்: பிரசித்திபெற்ற வனபத்ர காளியம்மன் யாருக்குச் சொந்தம் என, தேக்கம்பட்டி மற்றும் ராமேகவுண்டன் புதுார் ஊராட்சிகளுக்கு இடையே உரிமை கோரல் பிரச்னை எழுந்துள்ளது. காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தேக்கம்பட்டி ஊராட்சி. இங்கு, பிரசித்தி பெற்ற வனபத்திர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. தேக்கம்பட்டி ஊராட்சி 26 குக்கிராமங்களுடன் மிகப்பெரிதாக இருந்தது. எனவே, இதனை இரண்டாகப் பிரிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டு, சமீபத்தில் தேக்கம்பட்டி ஊராட்சியில் இருந்து 12 குக்கிராமங்களைப் பிரித்து, ராமேகவுண்டன்புதூர் என புதிதாக ஒரு ஊராட்சி உருவாக்கப்பட்டது.
தேக்கம்பட்டி ஊராட்சியில் விவேகானந்தபுரம், தேவனாபுரம், சாலையூர், கெண்டேபாளையம், சீரம்பாளையம், அரசப்பனூர், மொக்கை நகர், கிட்டம்பாளையம், பஞ்சுக்காடு புதூர், குட்டைப்புதூர், தொட்டதாசனுர், தேக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன் புதூர் ஆகிய 14 கிராமங்கள் உள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட ராமேகவுண்டன்புதூர் ஊராட்சியில் குரும்பனூர், அண்ணா நகர், ராமேகவுண்டன்புதூர், ராஜீவ் நகர், தாசம்பாளையம், சாமண்ணா நகர், வேல் நகர், அருள்ஜோதி நகர், கூடுதுறைமலை, வெல்ஸ்புரம், சமயபுரம், அம்மன் நகர் ஆகிய 12 கிராமங்கள் உள்ளன.
கோவில் யாருக்கு? ஒருங்கிணைந்த தேக்கம்பட்டி ஊராட்சியில் வனபத்திர காளியம்மன் கோவில் அமைந்திருந்த அம்மன் நகர் பகுதி தற்போது, புதிதாக உருவாக்கப்பட்ட ராமேகவுண்டன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது.
இதனால், கோவிலை இரு ஊராட்சிகளும் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கோருகின்றனர்.
'நூறாண்டுகளுக்கும் மேலாக, தேக்கம்பட்டி ஊர்மக்கள் தலைமுறை தலைமுறையாக வனபத்திர காளியம்மனை வழிபட்டு வருகிறோம். ஆடிக்குண்டம் திருவிழா கொடியேற்றம் தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில்தான் நடத்தப்படுகிறது. எனவே, கோவிலை மட்டும் தேக்கம்பட்டி ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்' என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை கிராமசபைக் கூட்டத்திலும் மனுவாக அளித்துள்ளனர்.
'நமது ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகரில்தான் வனபத்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. எனவே, ராமேகவுண்டன்புதூர் ஊராட்சியில்தான் கோவிலைச் சேர்க்க வேண்டும்' என, ராமேகவுண்டன்புதூர் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.
இரு ஊராட்சி கிராமசபைகளிலும் இதுகுறித்த தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு ஊராட்சி மக்களும் கோவிலை உரிமை கோருவதால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
