சிறுமுகையில் காட்டுயானை உலா வனத்துறையினர் எச்சரிக்கை
சிறுமுகையில் காட்டுயானை உலா வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : செப் 09, 2026 07:43 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் ஒற்றை காட்டு யானை நடமாடுவதால், மக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமுகையில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள விஸ்கோஸ் ஆலையில், 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் ஒன்று, நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில், பழத்தோட்டம் சாலையில் உலா வந்தது.
இதையடுத்து, சிறுமுகை வனச்சரகர் தினேஷ் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து, சிறுமுகை வனச்சரகர் தினேஷ் கூறுகையில் பருவமழை பொய்த்துள்ள நிலையில், பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதிகளில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.
வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் குடிநீருக்காக வெளியேறுவதைத் தடுக்க, வன எல்லைகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், தண்ணீரை தொடர்ந்து நிரப்பி வருகிறோம்.
5 குழுக்கள் அமைத்து இரவு, பகல் என இரு வேளைகளிலும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளோம்.
வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், இரவு நேரங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால், தனியாகவோ,கூட்டமாகவே சேர்ந்து விரட்ட முயற்சிக்க கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
