/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்டையாடியவரை பிடிக்கச் சென்ற வனத்துறையினர் மீது தாக்குதல்; ஜீப் கண்ணாடிகள் உடைப்பு
/
வேட்டையாடியவரை பிடிக்கச் சென்ற வனத்துறையினர் மீது தாக்குதல்; ஜீப் கண்ணாடிகள் உடைப்பு
வேட்டையாடியவரை பிடிக்கச் சென்ற வனத்துறையினர் மீது தாக்குதல்; ஜீப் கண்ணாடிகள் உடைப்பு
வேட்டையாடியவரை பிடிக்கச் சென்ற வனத்துறையினர் மீது தாக்குதல்; ஜீப் கண்ணாடிகள் உடைப்பு
ADDED : டிச 04, 2024 10:20 PM

மேட்டுப்பாளையம்; காட்டுப்பன்றியை வேட்டையாடியவரை பிடிக்க சென்ற காரமடை வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் சென்ற ஜீப் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் காரமடை அருகே கெம்மாரம்பாளையம் கிராமத்தில் சின்னகண்டியூர் பகுதி உள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி, அதையொட்டி வனப்பகுதி ஆகியவை இப்பகுதியில் உள்ளது. இதனிடையே, சின்னகண்டியூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வெங்கடஷ், 30, இவர் காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, காரமடை வனத்துறையினர் அவரை தேடி வந்தனர். பின் வனவர் சகாதேவன் தலைமையில் வனத்துறையினர் வெங்கடேஷிடம் விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை சென்றனர். அப்போது வெங்கடேஷின் தந்தை செல்வராஜ், வனவர் மற்றும் வனத்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின் வெங்கடேஷின் மனைவியிடம், வெங்கடேஷை வனசரக அலுவலகத்திற்கு வருமாறு வனத்துறையினர் கூறினர்.
இந்நிலையில் வெங்கடேஷின் உறவினரான கருப்பசாமி என்பவர் பெரிய கல்லை எடுத்து வனத்துறையினர் வந்த ஜீப்பின் முன், பின் உள்ள கண்ணாடிகள் மீது வீசி உடைத்தார். மேலும், அரிவாள் மற்றும் கற்களால் வனத்துறையினரை தாக்க முற்பட்டார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுதொடர்பாக வனத்துறை அலுவலர்கள் காரமடை போலீசாருக்கும், காரமடை வனசரக அலுவலர் ரஞ்சித் உள்ளிட்டோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், வனத்துறையினரை தாக்க வந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெங்கடேஷ் வீட்டில் இருந்து 3 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக செல்வராஜ், கருப்பசாமி, வெங்கடேஷ் மீது காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள், என்றார்.