திடக்கழிவு மேலாண்மையில் சபாஷ்: வழிகாட்டுகிறது வரதனுார்
திடக்கழிவு மேலாண்மையில் சபாஷ்: வழிகாட்டுகிறது வரதனுார்
UPDATED : செப் 15, 2026 04:05 PM
ADDED : செப் 15, 2026 12:51 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சியில் ரோட்டரி அமைப்பு சார்பில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் அமல்படுத்தப்படுகிறது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளில், 85 கிராமங்கள் உள்ளன. இதில், 33 ஊராட்சியில் ஒன்றிய நிர்வாகம் சார்பிலும், வரதனூர் ஊராட்சி செங்குட்டைபாளையம் கிராமத்தில் 'ரோட்டரி' அமைப்பு சார்பிலும் திடக்கழிவு மேலாண்மை கண்காணிக்கப்படுகிறது. செங்குட்டைபாளையத்தில் வீடுகளில் தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது; பெரும்பாலான மக்கள் ஒத்துழைக்கின்றனர். குப்பை சேகரிக்க இரண்டு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்கும் கூடாரம் சுற்றிலும் தூய்மையாக இருப்பதுடன், இப்பகுதியில் மக்கள் குப்பை கொட்டாமல் இருக்க பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது :
ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மையை முறைப்படுத்த தற்போது, 150 வீடுகளுக்கு, ஒரு தூய்மை பணியாளர் என, 143 பேர் உள்ளனர். வீடு தோறும் குப்பை சேகரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இரண்டு நாட்களான உணவுக் கழிவை காகிதம் மற்றும் பிளாஸ்டிக் குப்பையுடன் கலந்து வழங்குவதால் தரம் பிரிக்க தாமதமாகிறது. பணியாளர் விடுப்பு எடுத்தால் மறுநாள் சேகரிக்க சிரமம் ஏற்படுகிறது.
உணவு, காய்கறி கழிவை பிரிக்க வடபுதூரிலும், பிளாஸ்டிக்கை தரம் பிரிக்க கோடங்கிபாளையத்திலும் தனியாக ெஷட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து ஊராட்சிகளிலிருந்தும் குப்பையை இங்கு கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. செங்குட்டைபாளையத்தில் உள்ளது போல் மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மையை கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பையை தரம் பிரித்து உணவுக்கழிவை உரமாக மாற்றியும், பிளாஸ்டிக் கழிவை வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அதிலிருந்து வரும் தொகையில், 80 சதவீதம் தூய்மை பணியாளருக்கும், 20 சதவீதம் ஊராட்சிக்கும் செல்கிறது' என்றார்.
