/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை மேலாண்மைக்கு நிதி மறுபடியும்! 'சரியாக' பயன்படுத்தினால் சரி!
/
குப்பை மேலாண்மைக்கு நிதி மறுபடியும்! 'சரியாக' பயன்படுத்தினால் சரி!
குப்பை மேலாண்மைக்கு நிதி மறுபடியும்! 'சரியாக' பயன்படுத்தினால் சரி!
குப்பை மேலாண்மைக்கு நிதி மறுபடியும்! 'சரியாக' பயன்படுத்தினால் சரி!
UPDATED : மார் 10, 2024 01:40 AM
ADDED : மார் 09, 2024 09:11 PM

கோவை:திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை கொண்டு எரிவாயு தயாரிக்க ரூ.69.23 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த முறையாவது, ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்யாமல், முறையாக செலவிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது, 'இ-வேஸ்ட்' என, தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. வெள்ளலுார் குப்பை கிடங்கில் இக்குப்பை பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இப்பிரச்னை, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்றதை அடுத்து, வழக்கு விசாரணை நடந்து வருகிறது. குப்பை மேலாண்மை நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
வெள்ளலுார் கிடங்கில் தேங்கியிருந்த, 9.40 லட்சம் க.மீ., அளவு பழைய குப்பை, 'பயோ மைனிங்' முறையில் அழிக்கப்பட்டு, 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இடத்தில், 5 ஏக்கர் நிலத்தில் மரம் வளர்க்கவும், வேலி அமைத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் ரூ.50 லட்சம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
குப்பை கிடங்கை சுற்றிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், துர்நாற்றம் போக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக, வெள்ளலுார் கிடங்கில் இருக்கும், 7 லட்சத்து, 43 ஆயிரத்து, 287 கன மீட்டர் பழைய குப்பையை அழிப்பதற்கு, ரூ.58.54 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, கடந்த மாதம் அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்ட நிலையில், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேகரமாகும், 250 மெட்ரிக் டன் மக்கும் குப்பை கொண்டு, சுருக்கப்பட்ட உயிரி வாயு வாயிலாக, எரிவாயு தயாரிக்க ரூ.69.23 கோடியில் இந்நிதியாண்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குப்பையை வைத்து இதுவரை, பல கோடி ரூபாய்களை இதற்கென நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் கடந்த காலங்களில் சம்பாதித்து விட்டனர். இப்போது எரிவாயு தயாரிக்கப்போவதாக, மறுபடியும் பல கோடிகளை கொட்டப்போகிறார்கள்.
இதில் இருந்து எத்தனை கோடி ரூபாய்களை சம்பாதிக்கப்போகிறார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்.

