/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கந்தசஷ்டி விழா; சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
/
கந்தசஷ்டி விழா; சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED : நவ 08, 2024 11:53 PM

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவில், நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத் திருவிழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
* குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், ஊர் மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமி திருவீதி உலா நடந்தது.
* அங்கலகுறிச்சி செல்வமுருகன் கோவிலில் நேற்று காலை, 6:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகனுக்கு மஹா அபிேஷகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, திருக்கல்யாண உற்வசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடந்தது.
* ஜமீன்முத்துார் பாலமுருகன் கோவிலில், சூரசம்ஹார விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
* காளியப்பன்பாளையத்தில், தங்கவேல் அய்யன் வேலாயுதசுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
உடுமலை
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டு, சுவாமியை வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.
* பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, விவாக பூர்வாங்க பூஜைகள் நடந்தன. விநாயகர் கோவிலிருந்து, பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு, 7:00 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம், தீபாராதனை, ஊஞ்சல் சேவை நடந்தது.
* முத்தையாபிள்ளை லே-அவுட் சோழீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள, வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
* சின்ன பொம்மன் சாளை, முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* உடுமலை பழனியாண்டவர் நகர் பாலமுருகன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது. மேலும், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.
வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 12ம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.
நேற்று காலை, 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷக பூஜையும், காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், 12:30 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.
மணக்கோலத்தில் சுப்ரமணிய சுவாமி தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- நிருபர் குழு -