/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானம் அருகே குப்பை குவிப்பு; சுகாதாரம் பாதிப்பு
/
மயானம் அருகே குப்பை குவிப்பு; சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜன 20, 2025 10:56 PM

ரோட்டோர குப்பை
பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் மயானம் அருகே உள்ள ரோட்டின் ஓரத்தில், அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுற்றும் தெருநாய்கள் குப்பையை இழுத்து ரோட்டில் சிதறவிடுகின்றன. பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது, வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-- சரிதா, பொள்ளாச்சி.
தேங்கும் மழைநீர்
பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், மழை பெய்யும் நேரத்தில் ஆங்காங்கே ரோட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி செல்கின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டை சீரமைக்க செய்ய வேண்டும்.
- கோகுல், கிணத்துக்கடவு.
சேதமடைந்த ரோடு
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தும் இடத்தில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் ஓட்டுநர்கள் பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் சென்று வர சிரமப்படுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- ராம்குமார், கிணத்துக்கடவு.
போக்குவரத்து விதிமீறல்
வால்பாறை நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர். இதை போலீசார் கவனித்து சரி செய்ய வேண்டும்.
-- கர்ணன், வால்பாறை.
நாய்கள் ஜாக்கிரதை
பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் தெருநாய்கள் அதிகளவில் உலா வந்து, பொதுமக்களை அச்சுறுத்தியும், வாகனம் ஓட்டுநர்களுக்கு இடையூறாகவும் உள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டேனியல், பொள்ளாச்சி.
'லொள்' தொல்லை
உடுமலை, சங்கர் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் வர முடியாத வகையில், துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வதற்கும் பயப்படுகின்றனர்.
- ராஜ்குமார், உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை, சின்னவீரம்பட்டி இந்திரா நகர் பகுதியில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை இல்லை. பஸ்சுக்கு காத்திருக்கும் பயணியர் இடமில்லாமல் ரோட்டில் நிற்க வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் பயணியர் நிற்பதும் தெரியாத வகையில் இருப்பதால் விபத்து அபாயமும் அதிகரிக்கிறது.
- சந்தானம், சின்னவீரம்பட்டி.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பசுபதி வீதியில் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. அப்பகுதியில் பொதுமக்கள் நடப்பதற்கும், மற்ற வாகனங்கள் கடந்து செல்வதற்கும் முடியாமல் நெரிசலாகிறது.
- விஜயராகவன், உடுமலை.
இருளில் மூழ்கும் வீதி
உடுமலை, தென்னைமரத்து வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. மாலை நேரங்களில் குடியிருப்பு பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டுநர்கள் வீதியில் வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கும் அச்சப்படுகின்றனர்.
- ராஜேந்திரன், உடுமலை.
பாதாளசாக்கடை மூடி சேதம்
உடுமலை, சீனிவாசா வீதியில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகளின் மூடிகள் சிதிலமடைந்தும், உள்வாங்கியும் உள்ளன. இதனால் வாகனங்கள் அதன்மீது செல்லும் போது விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்களும் ஆபத்தை அறியாமல் அந்த மூடிகளின் மீது செல்கின்றனர்.
- கேசவன், உடுமலை.
பஸ் ஸ்டாண்டில் பள்ளம்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் கோவை பஸ்கள் நுழையுமிடத்தில் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் பஸ் ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அந்த பள்ளத்தை சரிசெய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கதிரேசன், உடுமலை.