ADDED : ஆக 18, 2026 05:52 PM
சூலுார்: சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் வரை சென்று திரும்பாத பஸ்களால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவையில், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் சூலுார் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள், சூலுார் – திருச்சி சாலையில் உள்ள புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல வேண்டும். அதேபோல், வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும் புது பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வந்து செல்ல வேண்டும். ஆனால், கோவையில் இருந்து சூலுார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கலங்கல் உட்பட கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பாமல், கலங்கல் சாலை வழியாக செல்வதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சூலுார் பயணிகள் கூறியதாவது:
சூலுார் புது பஸ் ஸ்டாண்டுக்கு பல டவுன் பஸ்கள் செல்வதில்லை. நேரடியாக கலங்கல் சாலையில் திரும்பி செல்கின்றன. புது பஸ் ஸ்டாண்டில் இறங்க வேண்டிய பயணிகளை, கலங்கல் சாலையில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால், முதியவர்கள், பெண்கள், மாணவர்கள், ஒரு கி.மீ., துாரம் நடந்து புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. அனைத்து டவுன் பஸ்களும், புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
