/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் சேமிக்க தயாராகுங்கள்: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
/
தண்ணீர் சேமிக்க தயாராகுங்கள்: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
தண்ணீர் சேமிக்க தயாராகுங்கள்: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
தண்ணீர் சேமிக்க தயாராகுங்கள்: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மே 20, 2025 12:13 AM

கோவை : பருவ மழை நெருங்குவதால், கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளில் கட்டாயம் மழைநீர் வடிகால் அமைப்பை, ஏற்படுத்த வேண்டும் என்று, கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, சற்று முன்னரே துவங்கி விட்டதோ என எண்ணும் அளவுக்கு, கடந்த சில நாட்களாக பிற்பகலில், மழை பெய்து வருகிறது.
சிறு துளி என்றாலும், தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் அதை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்துவதில், கோவை மாவட்டம் எப்போதும் பிற மாவட்டங்களுக்கு, முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள, புதிய நுழைவாயிலுக்கு தென் கிழக்கில், சிறுதுளி அமைப்பின் சார்பில், புதியதாக, மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இது போன்ற கட்டமைப்பை, பெரிய நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஏற்படுத்தலாம்.
வீடுகள், சிறிய வர்த்தக நிறுவனங்கள் அவர்களது பகுதிகளில், இது போன்ற கட்டமைப்பை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
மழைநீர், மேற்கூரைகள் மற்றும் சாலைகளில் தேங்கி நிற்காமல் இருக்க, வடிகால் அமைப்பு உதவும். மழைநீரை கூரைகளிலிருந்து வெளியேற்றி, சேமிப்பு பகுதிக்கு கொண்டு செல்ல, வடிகால் குழாய்கள் மற்றும் நீர்ப்பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மழைநீரை நிலத்தடிக்கு எடுத்துச் செல்லும், இந்த வடிகால் அமைப்பை பொதுவான சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அமைக்கலாம். இப்படி மழைநீர் வடிகால் அமைப்பதால், மழைநீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம், மழையால் ஏற்படும் வெள்ளம் மற்றும் பாதிப்பை முழுமையாக தடுக்கலாம்.
அதிக மழைநீர் ஓட்டம் ஏற்பட்டால் ஏற்படும் மண்ணரிப்பையும் தடுக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் உயரும்; தரமும் மேம்படும் என்கிறார், கோவை கலெக்டர்.
அவர் மேலும் கூறியதாவது: பருவமழை துவங்க உள்ளது. மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்பை வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்து தரப்பினரும் ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தியிருந்தால், அதில் ஏதேனும் அடைப்புகள் இருக்கிறதா, மழைநீர் செல்லும் வடிகால்கள் சரியாக இருக்கிறதா, பழுதுபட்டுள்ளதா என்று பரிசோதித்து, அதற்கேற்ப வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். அப்போது நிலத்தடிநீர் மட்டம் உயரும். வேளாண்மை பெருகும்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.