இணைய வழியில் டி.எஸ்.எல்.ஆர். பெறுவது இப்போது எளிதாகி விட்டது
இணைய வழியில் டி.எஸ்.எல்.ஆர். பெறுவது இப்போது எளிதாகி விட்டது
ADDED : செப் 25, 2026 07:31 PM
நிலம் சம்பந்தமான சேவைக்கு எந்த ஒரு அரசு அலுவலகத்தை அணுகினாலும் அவசியம் கேட்கப்படுவது டி.எஸ்.எல்.ஆர்.( டவுன் சர்வே லேண்ட் ரெகார்ட் ) ஆகும்.
விண்ணப்பத்துக்கு சம்பந்தப்பட்ட நிலத்தின் விபரங்களான சர்வே எண், உட்பிரிவு எண், சர்வே வார்டு, பிளாக், பரப்பளவு, வகைப்பாடு, உரிமையாளர்களின் பெயர் ஆகியவை டி.எஸ்.எல்.ஆரில் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் நில உரிமையாளர் மாறும் போது அவரின் பெயர் டி.எஸ்.எல்.ஆரில் பதிவிடப்படும். இதை செய்வதும் பாதுகாப்பதும் வருவாய் துறையாகும்.
வருவாய் துறை உடனுக்குடன் பெயர் சேர்க்காவிட்டால் தற்போதைய நில உரிமையாளரை கண்டறிவது சிரமம். நிலம் அரசு ஆர்ஜிதம் செய்வதற்கான நஷ்டஈடு டி.எஸ்.எல்.ஆரில் இருப்பவருக்கே உரிமையானது.
மாநகராட்சி அல்லது வருவாய் துறைக்கு சென்று TSLRஐ பெற வேண்டிய நிலை மாறி அதை இணையம் வழியாக நாம் நம்மிடத்திலிருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ள அரசு வசதி ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்த ஆவணம் எல்லா அரசு துறைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும். எவரிடமிருந்தும் கையொப்பம் பெற வேண்டியதில்லை.
பெரும்பான்மையான சொத்து ஆவணங்களில் சர்வே பீல்ட்(எஸ்.எப்.) அல்லது காலை எண், அதன் உட்பிரிவு மற்றும் சர்வே கிராமத்தின் பெயர் இருக்கும். உதாரணம், எஸ்.எப்.எண் 098, சவுரிபாளையம் கிராமம், அப்படியெனில் இதன் டி.எஸ். எண் பெறுவது அவசியமாகிறது.
இணையதளம் tnlandsurvey.tn.gov.in சென்று Correlation Statement அழுத்தி, மாவட்டம், தாலுக்கா, டவுன் ஆகியவற்றை குறிப்பிட்டால் அனைத்து காலை எண்களுக்கும் உண்டான புதிய வார்டு, பிளாக், டி.எஸ். மற்றும் அதன் உட்பிரிவு எண் கிடைக்கும்.
மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை, கோவை வடக்கு, தெற்கு என்றே பிரிக்கப்பட்டுள்ளது. இதே விபரங்களை பயன்படுத்தி coimbatorelpa.com தளத்திலிருந்து முழுமையான திட்ட வரைவு விவரங்களையும் வரைபடங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.
