/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காடு ரோடு பாலத்தில் பார்த்து போங்க! மீண்டும் பெயர்ந்திருக்கு இரும்பு சட்டம்
/
பாலக்காடு ரோடு பாலத்தில் பார்த்து போங்க! மீண்டும் பெயர்ந்திருக்கு இரும்பு சட்டம்
பாலக்காடு ரோடு பாலத்தில் பார்த்து போங்க! மீண்டும் பெயர்ந்திருக்கு இரும்பு சட்டம்
பாலக்காடு ரோடு பாலத்தில் பார்த்து போங்க! மீண்டும் பெயர்ந்திருக்கு இரும்பு சட்டம்
ADDED : டிச 27, 2025 06:34 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பராமரிப்பின்றி உள்ளன. விபத்தை தடுக்க இரும்பு சட்டத்தையே தடுப்பாக மாற்றி வைத்துள்ளது, வாகன ஓட்டுநர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை இணைக்கும் பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி --- போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 2022ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளன. வாகனங்கள் வேகமாக அதிர்ந்து சப்தம் எழுப்புவதுடன், விபத்துகளை ஏற்படுத்தும் அபாயமும் இருந்தது. கடந்தாண்டு சேதமடைந்த இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இரும்பு சட்டங்கள் மீண்டும் பெயர்ந்து நிற்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பெயர்ந்து கம்பிகள் தெரிவதால், வாகனங்கள் பழுதாகும் நிலை உள்ளது. வேகமாக வரக்கூடிய வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
இவற்றை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. தற்போது, பாலத்தின் ஒரு புறம், பெயர்ந்த இரும்பு சட்டத்தையே, பாதுகாப்பு தடுப்பாக அதிகாரிகள் மாற்றி வைத்துள்ளதாக தெரிகிறது. இது வேடிக்கையாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது.
மேலும், பாலத்தின் நடுவே குழியும் ஏற்பட்டுள்ளதால், விபத்து அபாயம் உள்ளது. பாலத்தில் குழி ஏற்பட்டுள்ள பகுதியில் விரிசல் விட்டுள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

