/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்த ஆங்கில புத்தாண்டில் கோவை மக்களுக்கு... நல்லதே நடக்கும்! தேர்தல் வருவதால் பல திட்டங்கள் வர வாய்ப்பு!
/
இந்த ஆங்கில புத்தாண்டில் கோவை மக்களுக்கு... நல்லதே நடக்கும்! தேர்தல் வருவதால் பல திட்டங்கள் வர வாய்ப்பு!
இந்த ஆங்கில புத்தாண்டில் கோவை மக்களுக்கு... நல்லதே நடக்கும்! தேர்தல் வருவதால் பல திட்டங்கள் வர வாய்ப்பு!
இந்த ஆங்கில புத்தாண்டில் கோவை மக்களுக்கு... நல்லதே நடக்கும்! தேர்தல் வருவதால் பல திட்டங்கள் வர வாய்ப்பு!
UPDATED : ஜன 01, 2024 01:34 AM
ADDED : ஜன 01, 2024 12:18 AM

-நமது நிருபர்-
பிறந்திருக்கும் ஆங்கில புத்தாண்டில், லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், கோவை மாநகர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், பல புதிய திட்டங்கள் வருமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
கோவை நகரம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக மட்டுமின்றி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும் மாறியுள்ளது.
ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்து, பல லட்சம் பேருக்கு வாய்ப்பு அளிக்கும் நகரமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு நகரம் விரிவடைகிறது; மக்கள் தொகை பெருகி வருகிறது.
2021ல், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்காத போதிலும், 21 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வசிப்பதும், தினமும் பல லட்சம் மக்கள் வந்து செல்வதும் உறுதியாகியுள்ளது.
இந்த நகரம், இங்குள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் கூட்டு உழைப்பால், இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியுள்ளது; இப்போது பன்முகத்தன்மை கொண்ட நகரமாக உருவெடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகத்தான், மத்திய, மாநில அரசுகளின் கவனம், கோவையின் மீது திரும்பியுள்ளது. இரு அரசுகளும் இணைந்தும், தனித்தும் பல திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும் வருகின்றன.
இரு அரசுகளுக்கும் பொறுப்பு
கட்டமைப்பு வசதிகளில், கோவை சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இன்னும் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு, இரு அரசுகளுக்கும் உள்ளது.
இதற்கு மிக முக்கியமானது, விமான நிலைய விரிவாக்கம்; நிலம் கையகப்படுத்தித் தரப்பட்டுள்ள நிலையில், விரிவாக்கப்பணியை விரைவாகத் துவக்க வேண்டும்.
கோவை ரயில் சந்திப்பை, பெரியளவில் விரிவாக்கம் செய்வதோடு, எளிய மக்களுக்கு உதவும் சாதாரண ரயில்களை, அதிகளவில் இயக்க முன் வர வேண்டும்.
கிழக்கு புறவழிச்சாலை, 'எல் அண்ட் டி' பை பாஸ் விரிவாக்கம், கோவை-கரூர் பசுமை வழிச்சாலை, சத்தி ரோடு விரிவாக்கம், பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலைகள் உட்பட மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் நிறையவுள்ளன.
மெட்ரோ ரயில் திட்டம்
இவற்றைத் தவிர்த்து, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் மத்திய அரசின் சார்பில் நிதியுதவி அளிக்க வேண்டும்.
கோவை மெட்ரோ ரயில், செம்மொழிப் பூங்கா, மத்திய சிறை இடமாற்றம், வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னைக்குத் தீர்வு, மேற்கு புறவழிச்சாலை, கட்டப்பட்டு வரும் பாலங்கள் நீட்டிப்பு, சொத்துவரி, மின் கட்டணம் குறைப்பு என தமிழக அரசிடம் கோவை மக்களுக்கான எதிர்பார்ப்புகள் அதை விட அதிகமாக உள்ளன. இவற்றில் பல திட்டங்கள், பல ஆண்டுகளாக வெறும் அறிவிப்பாகவே இருக்கின்றன.
புத்தாண்டில் நன்மைகள்
இந்நிலையில் இன்று பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டாவது, மத்திய, மாநில அரசுகளின் ஆளும்கட்சிகள், சில திட்டங்களை கோவைக்கு அறிவிக்க வாய்ப்புள்ளது.
கோவையில் ஜெயிப்பது, அரசியல்கட்சிகளின் கவுரவப் பிரச்னையாகவுள்ளதால், எந்த வகையிலாவது கோவைக்கு சில நன்மைகள் நடக்குமென்பது நிச்சயம்.
தேர்தலுக்காக மட்டுமின்றி, கோவை நகரின் வளர்ச்சிக்காக, சில திட்டங்களையாவது துவக்கவும், நடந்து வரும் பணிகளை முடிக்கவும் வாய்ப்பு அதிகமுள்ளது.
அந்த நம்பிக்கையுடன், இந்த ஆங்கில புத்தாண்டை கோவை மக்கள் வரவேற்கின்றனர். கடந்து போன ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அந்த நம்பிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
நம்புவோம்...நல்லதே நடக்கும்!