/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு நல்ல காலம்! மீண்டும் பணிகள் விறுவிறு; ஜூலையில் முடியுமென எதிர்பார்ப்பு
/
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு நல்ல காலம்! மீண்டும் பணிகள் விறுவிறு; ஜூலையில் முடியுமென எதிர்பார்ப்பு
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு நல்ல காலம்! மீண்டும் பணிகள் விறுவிறு; ஜூலையில் முடியுமென எதிர்பார்ப்பு
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு நல்ல காலம்! மீண்டும் பணிகள் விறுவிறு; ஜூலையில் முடியுமென எதிர்பார்ப்பு
ADDED : பிப் 15, 2024 06:46 AM

கோவை ஒண்டிப்புதுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் நடந்து வரும் ரயில்வே மேம்பாலப்பணி, வரும் ஜூலையில் முடிவடையுமென்று தெரியவந்துள்ளது.
கோவை, ஒண்டிப்புதுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரோட்டில் ரயில்வே கேட் (எண்:4) இருந்த இடத்தில், ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம், 2010-2011 ரயில்வே திட்டப் பட்டியலில் இடம் பெற்றது.
2010 நவ.,10ல் ரூ.19 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதலுக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. பணிகள் துவங்கிய நிலையில், நிலமெடுப்பதில் வழக்கம்போல் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்தார்கள் வழக்கு
பாலம் மற்றும் சர்வீஸ் ரோடு அமைக்கும் இடங்களில், நிறைய கட்டடங்கள் இருந்ததால், உரிய இழப்பீடு நிர்ணயிக்காமல், பாலம் கட்டும் பணியைத் தொடரக்கூடாது என்று, நில உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர்.
2016-2021 அ.தி.மு.க., ஆட்சியில், இத்தொகுதியில் தி.மு.க., எம்.எல்.ஏ., இருந்ததால், வழக்கை விரைந்து முடிக்கவும், பாலத்தைக் கட்டவும் அரசு முயற்சி எடுக்கவே இல்லை.
2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, அ.தி.மு.க., இங்கு வெற்றி பெற்றது. மறுபடியும் இழுபறி ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் சட்டரீதியாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் பெருமளவு நில உரிமையாளர்களை சமாதானப்படுத்தி, பணிகள் துவங்கின.
இடையில் மதிப்பீடு பல மடங்கு உயர்ந்து விட்டதால், 2020 ஜன.,21ல், பாலம் கட்ட ரூ.43.22 கோடி நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது.
அதற்குப் பின்னும் சிலர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து, பணிகளை நிறுத்தினர். சில போராட்டங்களும் நடந்தன.
மீண்டும் ஒரு அரசாணை!
மீண்டும் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மதிப்பீடு மேலும் அதிகரித்து, பாலம் கட்டுவதற்கு, 2023 மே 4ல் ரூ.55 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்து, மீண்டும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. பின்பே பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
தண்ணீர்ப்பந்தல் பாலம் போலவே, இங்கும் ரயில்வே பகுதியில் பாலம் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாகி விட்டது.
அணுகுசாலை, சர்வீஸ் ரோடு, நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டும் பணிகள், நிலமெடுப்புக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் தாமதமாகி வந்தது.
2021 அக்.24ல், நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக, ரூ.29 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்குப் பின்னும், பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது.
ஒரு வழியாக, பணிகள் நடக்கும் பகுதிகளைக் கையகப்படுத்திய நெடுஞ்சாலைத்துறை, 2023 ஆக.,14ல் தான், மீண்டும் பணியைத் தொடர்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
அதற்குப் பின், பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. மூன்று 'டெக் ஸ்லாப்' பாக்கி இருந்ததில், இரண்டில் பணிகள் முடிந்துள்ளன; நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
வரும் ஏப்ரலுக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, மே மாதத்தில் பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முழுமையாகப் பணிகள் முடிவதற்கு, ஜூன் அல்லது ஜூலை ஆகிவிடும்' என்கிறார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர்.
பாலம் திறக்கப்படும் நாளுக்காக, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
-நமது நிருபர்-

