/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
கோர்ட் உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
கோர்ட் உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
கோர்ட் உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : ஏப் 03, 2025 11:37 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கோர்ட் உத்தரவுப்படி விபத்து இழப்பீடு வழங்காததையடுத்து, அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், கடந்த, 2016ம் ஆண்டு ஜூலை, 3ம் தேதி ஆட்டோ மோதியதில், ஹரிகிருஷ்ணன் கீழே விழுந்தார். அப்போது, அரசு பஸ் மோதியதில் ஹரிகிருஷ்ணன் இறந்தார்.அதற்காக நஷ்டஈடு கோரி அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள், மகன் ஆகியோர் பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வக்கீல் பிரவின்குமார் வழக்கை நடத்தினார்.
கடந்த, 2023ம் ஆண்டு நவ.,3ம் தேதி பொள்ளாச்சி சார்பு நீதிபதி மோகனவள்ளி விசாரித்து மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 22.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கினார். அதில், ஆட்டோ இன்சூரன்ஸ், 11.25 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மனுதாரருக்கு, 11.25 லட்சம் ரூபாய், வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், இன்சூரன்ஸ் நிறுவனம், வட்டி, செலவு தொகையுடன் இழப்பீடு தொகையை செலுத்திவிட்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் தொகையை செலுத்தாத காரணத்தினால் மனுதாரர்கள் ஜப்தி மனுவை, சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதன்படி, வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து, 16 லட்சத்து, 22 ஆயிரத்து, 288 ரூபாய் செலுத்த தவறியதால், பொள்ளாச்சி சார்பு நீதிபதி பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கோவை செல்லும் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.