ADDED : நவ 20, 2024 12:49 AM
சூலுார்; உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி, வரும், 23ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடைசி கூட்டம் என்பதால் காரசார விவாதங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும், குடியரசு தினமான ஜன., 26, உலக தண்ணீர் தினமான, மார்ச் 22, தொழிலாளர் தினமான, மே 1, சுதந்திர தினமான, ஆக., 15, காந்தி ஜெயந்தியான, அக்., 2 உள்ளாட்சிகள் தினமான, நவ., 1ம் தேதி ஆகிய ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த, நவ., 1ம் தேதி நடக்க இருந்த உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக, ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை, வரும், 23ம் தேதி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட துாய்மை காவலர்கள், பணியாளர்களை கவுரவிக்கவும், சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழைநீர் தடையின்றி வெளியேற வழி செய்தல், குடிநீர், மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தல், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்குதல், குளம், குட்டைகளின் கரைகளை கண்காணித்தல், மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தரப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், துாய்மை பாரத இயக்கம், 100 நாள் வேலை உறுதி திட்டம் ஜல் ஜீவன் திட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், அரசு உத்தரவிட்டுள்ளது.
கடைசி கிராம சபை
வரும், 23ம் தேதி நடக்கும் கூட்டம், உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடைசி கூட்டமாக இருக்கும். வரும், டிசம்பர் மாதத்துடன் உள்ளாட்சி நிர்வாகங்களின் பதவி காலம் முடிவடைகிறது.
அதனால், ஒவ்வொரு கிராம சபையிலும் காரசாரமான விவாதங்கள் நடக்கும். மேலும், பல்வேறு புகார்களையும் எழுப்ப எதிர்தரப்பினர் தயாராகி வருகின்றனர்.