/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் வேண்டுகோள்
/
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் வேண்டுகோள்
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் வேண்டுகோள்
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் வேண்டுகோள்
ADDED : செப் 27, 2024 11:07 PM
'ஒவ்வொரு ஆண்டும், அமராவதியில் இருந்து விரயமாகும் உபரிநீரை, உப்பாறு கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்): உப்பாறு பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் கேட்கவில்லை. வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அணைக்கு உயிர் தண்ணீர் வேண்டுமென தான் கேட்கிறோம். ஒவ்வொரு ஆண்டும், 10 நாட்களுக்கு உயிர் தண்ணீர் விட்டால் போதும், கால்நடைகளுக்காவது தண்ணீர் கிடைக்கும்.
தண்டபாணி (கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர்): உப்பாறு அணைக்கு தண்ணீர் இருந்தால், நிலத்தடி நீர் மட்டம் செறிவூட்டப்படும். அமராவதி ஆற்றில், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் வீணாக செல்கிறது. பாசன திட்டம் போக, உபரியாக வீணாகும் தண்ணீரை, உப்பாறு கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். விரயமாகும் தண்ணீரை பாதுகாப்பாக சேமித்தால், விவசாயிகள் பயனடையலாம்.
மதுசூதனன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): நாற்பது ஆண்டுகளாக இல்லாத வகையில், கோவையில் நடந்த வேளாண் திட்ட முகாம் குறித்து விவசாயிகளுக்கு தகவல் தெரியவில்லை. உடுமலை உழவர் சந்தையில், வியாபாரிகள் கடை நடத்துகின்றனர்; வெளியேற்ற வேண்டும்.
பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்ப்பு
பி.ஏ.பி., திட்டக்குழு உறுப்பினர்கள் பேசுகையில், 'பி.ஏ.பி., திட்டத்தில், கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க முயற்சிக்க கூடாது; முடிவை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
பதிலளித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் கேட்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து எவ்வித முடிவும் செய்யவில்லை. பி.ஏ.பி., பாசன திட்டம், அமைப்பு ரீதியாக இயங்கி வருகிறது.
உபரி தண்ணீர் கிடைத்தாலும், பி.ஏ.பி., நிர்வாக அமைப்புகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே முடிவெடுக்க முடியும். மற்றபடி, பி.ஏ.பி., திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் தலையீடு இருக்காது. உபரிநீர் கிடைத்தால் மட்டுமே உப்பாறுக்கு தண்ணீர் வழங்க முடியும்; தற்போது, அதுதொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என்றார்.
பின், கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்
- நமது நிருபர் -.