/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேர்வாடல் நோய் பாதிப்புகள் குறித்து குழு ஆய்வு
/
வேர்வாடல் நோய் பாதிப்புகள் குறித்து குழு ஆய்வு
ADDED : நவ 03, 2025 11:49 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், தென்னையில் வேர்வாடல் நோய் பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்நிலையில், வெள்ளை ஈ தாக்கம், கேரளா வேர் வாடல் நோயினால், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு மகசூல் பாதியாக குறைந்துள்ளது.
அதில், வேர் வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களை விவசாயிகள் வெட்டி சாய்த்து வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சகத்தின் உத்தரவின்பெயரில், தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை இயக்குநர், தலைமை தென்னை வளர்ச்சி அலுவலர் ஹனுமந்த கவுடா, மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஜோசப் ராஜ்குமார், தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் சாந்தாசெலின் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர், நேற்று பொள்ளாச்சி பகுதியில் ஆய்வு செய்தனர். விவசாயிகளிடம், வேர் வாடல் குறித்து ஆய்வு செய்து, பிரச்னைகளை கேட்டறிந்தனர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை பகுதிகளில், விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேர்வாடல் நோய் பாதிக்கப்பட்ட தோட்டங்களை ஆய்வு செய்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு செய்த பின், மத்திய வேளாண்மை துறை அமைச்சரிடம் இக்குழுவினர் அறிக்கை சமர்பிக்க உள்ளனர்,' என்றனர்.

