/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக நடைமுறைக்கு புது வடிவம் அளித்தது ஜி.எஸ்.டி.,: ஜி.எஸ்.டி., ஆணையர் பேச்சு
/
வணிக நடைமுறைக்கு புது வடிவம் அளித்தது ஜி.எஸ்.டி.,: ஜி.எஸ்.டி., ஆணையர் பேச்சு
வணிக நடைமுறைக்கு புது வடிவம் அளித்தது ஜி.எஸ்.டி.,: ஜி.எஸ்.டி., ஆணையர் பேச்சு
வணிக நடைமுறைக்கு புது வடிவம் அளித்தது ஜி.எஸ்.டி.,: ஜி.எஸ்.டி., ஆணையர் பேச்சு
ADDED : ஜூன் 16, 2025 10:18 PM

கோவை; ''இந்தியாவின் வணிகம் செய்யும் போக்கையே மாற்றி, புது வடிவமைப்பைத் தந்தது ஜி.எஸ்.டி., முறை,'' என, கோவை ஆணையரக ஜி.எஸ்.டி., கமிஷனர் தினேஷ் பங்கர்கர் பேசினார்.
கோவை ஜி.எஸ்.டி., ஆணையரகம் சார்பில், 'ஜி.எஸ்.டி., 8 ஆண்டுகள்: இதுவரையிலும்- எதிர்கொள்ளவிருக்கும் சவால்களும்' மாநாடு, துடியலூர் ஐ.சி.ஏ.ஐ., பவன் வளாகத்தில் நடந்தது.
ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் தினேஷ் பங்கர்கர் தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி., என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட வரி சீர்திருத்தமானது, சுதந்திர இந்தியாவில் திடமாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான முடிவாகும்.
இது, மறைமுக வரி நடைமுறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. வரி செலுத்துபவர்கள், வரி வருவாய் பன் மடங்காக உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி., அமலுக்குப்பிறகு வரி செலுத்துவது வெளிப்படையானதாக, எளிமையானதாக, ஒருங்கிணைந்ததாக மாறியிருக்கிறது.
வணிகம் செய்யும் முறை, புது வடிவமைப்பை எட்டியுள்ளது. கடந்த ஏப்.,ல் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.2.36 லட்சம் ஈட்டப்பட்டு, புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகளை முன்னிட்டு, ஜூன் 16 முதல் ஜூன் 30ம் தேதி வரை, 15 நாட்கள் பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. இந்த எட்டு ஆண்டுகள் என்பது, குறுகிய காலம்தான். ஆனால், ஏராளமான மைல்கற்களைக் கடந்துள்ளோம்.
வரி செலுத்துதல் செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்; வரி செலுத்துபவர்கள் சவுகரியமாக உணர வேண்டும் என்பதே, எங்கள் பிரதான இலக்கு. சேர்ந்தே முன்னேறுவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று, ஜி.எஸ்.டி., நோட்டீஸ், சேவைப்பிரிவினர் பதிவு செய்வதில் உள்ள சிரமம், ஐ.டி.சி., பெறுதல், இ--வே பில், 74வது பிரிவு, 'கிரெடிட் பிளாக்' உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர்.
அவற்றை, ஜி.எஸ்.டி., அதிகாரிகள், ஆணையத்துக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.
கொடிசியா துணைத் தலைவர் ரங்கசாமி, இந்திய தொழில்வர்த்தக சபை கோவை செயலாளர் அண்ணாமலை, சியா தலைவர் தேவகுமார், ஐ.சி.ஏ.ஐ., கோவை துணைத் தலைவர் சர்வஜித் கிருஷ்ணன், ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் லட்சுமி காந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.