/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை முருகனை காண நான்கு மாடி வீடு கட்டியவர்!
/
மருதமலை முருகனை காண நான்கு மாடி வீடு கட்டியவர்!
ADDED : டிச 22, 2025 05:09 AM
த ன் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோயிலை, தினமும் ஜன்னல் வழியாக பார்த்து மகிழ்ந்து கொள்வதற்காக, ஒரு மனிதர் கோவையில் மூன்றடுக்கு மாடி வீடு கட்டினார். அங்கிருந்தும் தரிசனம் கிட்டவில்லை என்பதால், உடனடியாக நான்காவது மாடியும் கட்டினார். அதிலிருந்து தன் இஷ்ட தெய்வத்தை தரிசித்து வந்தார். அவர், சாண்டோ சின்னப்பதேவர். தரிசித்தது மருதமலை முருகன் கோயிலை.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர், 1956 முதல் 1978 வரை, 49 வெற்றிப் படங்களைத் தயாரித்து தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தார். ராஜலட்சுமி மில்லில் தொழிலாளியாக இருந்த காலத்தில், சினிமா ஆசையால் கடன் வாங்கி, நடிகர் எம்.ஜி.ஆரை வைத்து, 'தாய்க்குப் பின் தாரம்' என்ற படத்தைத் தயாரித்தார்.
படப்பெட்டியை மருதமலை முருகன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வெளியிட்டார். 1956-ல் வெளியான அப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது, மருதமலை கோயிலில் மின்சார வசதி இல்லை; வடவள்ளி வரை தான் மின் இணைப்பு. எப்படியும் மருதமலைக்கு மின்சாரம் வரவேண்டும்' என்ற எண்ணம் அவரைத் தூங்க விடவில்லை. மின்சார வாரிய அதிகாரிகளைச் சந்தித்தார். கல்வீரம்பாளையம் வழியாக மின் இணைப்பு வந்தால்தான், மருதமலைக்கு மின்சாரம் கொடுக்க முடியும் என்றனர் அதிகாரிகள்.
உடனே கல்வீரம்பாளையம் மக்களை சந்தித்தார். அனைவரும் மின் இணைப்புக்காக விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்றார். அனைத்து விண்ணப்பங்களுக்கும் அவரே கட்டணம் செலுத்தினார். இதன் பயனாக, 1962-ல் கல்வீரம்பாளையம் முதன்முறையாக, மின்சார வெளிச்சம் கண்டது. மருதமலை அடிவாரத்திலிருந்து கோயில் வரை, படிக்கட்டுப் பாதையில் விளக்குகள் எரிந்தன. கோயிலுக்குள்ளும் ஒளி பரவியது. 1962 டிச. 7ம் தேதி அந்த விளக்குகளை ஏற்றும் விழா நடந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய அந்த விழாவில், விளக்கேற்ற வந்தவர் யார் தெரியுமா? 'பொன்மனச் செம்மல்' எம்.ஜி.ஆர்!

