/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழையால் தடுப்பணைகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி
/
கனமழையால் தடுப்பணைகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி
கனமழையால் தடுப்பணைகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி
கனமழையால் தடுப்பணைகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 23, 2024 10:38 PM

மேட்டுப்பாளையம்: காரமடை, மத்தம்பாளையம், வீரபாண்டி பிரிவு, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால், பெள்ளாதி குளம் மற்றும் ஏழு எருமை பள்ளத்தில் உள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
பெரியநாயக்கன்பாளையத்தில் துவங்கி, வீரபாண்டி பிரிவு, பிளச்சி, மத்தம்பாளையம், காரமடை வழியாக சிறுமுகையில் பவானி ஆற்றுக்கு சென்றடையும் வகையில், ஏழு எருமை பள்ளம் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தின் குறுக்கே பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
காரமடை கன்னார்பாளையத்தில் உள்ள தடுப்பணையின் ஓரத்தில், ஏழு எருமை பள்ளத்தில் வரும் தண்ணீர், பெள்ளாதி குளத்திற்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பள்ளத்தில் வந்த காட்டாறு வெள்ளம், வாய்க்கால் வழியாக பெள்ளாதி குளத்திற்கு சென்றது. அதனால், 110 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, பெள்ளாதி குளம் நிரம்பி வழிகிறது.
மேலும், ஏழு எருமை பள்ளத்தில் சிக்காரம்பாளையம் ஊராட்சியில், உள்ள ஏழு எருமை பள்ளத்தில் காளட்டியூர், கன்னார்பாளையம், கருப்பராயன் நகர், பெள்ளாதி ஊராட்சியில் பெள்ளாதி, மொள்ளேபாளையம், தேரம்பாளையம், பாச்சனுர், பெள்ளேபாளையம் ஊராட்சியில் பகத்தூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பள்ளத்தில் வந்த காட்டாறு வெள்ளத்தால், அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: காரமடை பகுதி முழுவதும் வானம் பார்த்த பூமியாகும்.கிணறுகள் மற்றும் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி, விவசாயம் செய்து வருகிறோம். ஏழு எருமை பள்ளத்தில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நின்றால், மூன்று கி.மீட்டர் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிணறுகளில், தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நீரூற்று கிடைக்கும். இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.