/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு மணி நேரம் கனமழை; ஸ்தம்பித்தது நகரம்
/
ஒரு மணி நேரம் கனமழை; ஸ்தம்பித்தது நகரம்
ADDED : அக் 09, 2024 10:25 PM

பொள்ளாச்சியில், நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால், நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் ஸ்தம்பித்தன.
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி நகரில், நேற்று காலை முதல் மதியம் வரை, வெயில் சுட்டெரித்தது. மாலை, 4:15 மணிக்கு, கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழையின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாலையில், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலை முடித்து வீடும் திரும்பும் பணியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். பாதசாரிகள், இரண்டு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், பாதுகாப்பான இடம் தேடி தஞ்சம் அடைந்தனர்.
முக்கிய வழித்தடங்களில், இலகு மற்றும் கனரக வாகனங்கள், முகப்பு விளக்கை ஒளிர செய்து இயக்கப்பட்டன. அதேநேரம், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்துடன் சாக்கடை கழிவு நீர் தேங்கியது சங்கடத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, கரியகாளியம்மன் கோவில் வீதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல, மாக்கினாம்பட்டி, தேர்முட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ரோட்டை மூழ்கச் செய்து மழை வெள்ளம் பாய்ந்ததால், வாகன ஓட்டுநர்கள் திணறினர்.
ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் சாக்கடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீரும் சாக்கடை கழிவுநீரும் ரோடு முழுவதும் தேங்கியது.
பழைய பஸ் ஸ்டாண்டில், நிழற்கூரை இடிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்கு ஒதுங்க முடியாமல் பயணியர் பரிதவித்தனர்.
நகராட்சி நிர்வாகம், மழைநீர் வடிந்து செல்லும் பகுதிகளை துார்வாரி, சுத்தம் செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* வால்பாறையிலும் நேற்று கனமழை பெய்தது. சுற்றுப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் குளிரின் தாக்கமும் அதிகரித்ததால், மக்கள் ஸ்வெட்டர், ஜர்க்கின் அணிந்தவாறு இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி, படகு இல்லம் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு, சுற்றுலாப் பயணியர் அறிவுறுத்தப்பட்டனர். மலைப்பாதையில் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்கவும் வாகன ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
* உடுமலை பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், குளிர் சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதோடு, பசுமை திரும்பியுள்ளது.
கனமழை பெய்ததால், ரோட்டில் மழை வெள்ளம் கரைபுரண்டு சென்றது. வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றனர். மாலை நேர மழையால், மக்களின் இயல்பு வாழக்கை முழுமையாக பாதித்தது.
- நிருபர் குழு -