/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழை; 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது தோட்டத்து மண்மேடுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு
/
கனமழை; 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது தோட்டத்து மண்மேடுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு
கனமழை; 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது தோட்டத்து மண்மேடுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு
கனமழை; 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது தோட்டத்து மண்மேடுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு
ADDED : அக் 19, 2025 11:00 PM

அன்னுார்: அன்னுாரில் கனமழையால் 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் வழித்தடத்தை தடுத்த, விவசாயிகளின் தோட்டத்து மண் மேடுகள் அகற்றப்பட்டன.
அன்னுார் வட்டாரத்தில் நேற்று அதிகாலை 1:00 முதல் 3:00 மணி வரை, கன மழை பெய்தது. இதில் அன்னுாரின் வடக்கு பகுதியில் இருந்து மழை நீர், தெற்கு பகுதியை நோக்கி பாய்ந்தது.
இதில் அன்னுார் நகரில் சத்தி சாலையில் உள்ள, பழனி கிருஷ்ணா அவென்யூவில் 40 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீடுகளுக்குள் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் நின்றது.
இதனால், கழிவுநீருடன், பாம்புகளும் வீடுகளுக்குள் புகுந்தன. தோட்டங்களிலும் மழை நீர் தேங்கியது. தகவல் அறிந்து தாசில்தார் யமுனா, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர், அங்கு ஆய்வு செய்தனர்.
பேரூராட்சி சார்பில், மோட்டார் மூலம் தாழ்வான பகுதியிலிருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள், அந்த பகுதி தோட்ட உரிமையாளர்களிடம் மழை நீர் செல்ல வழி ஏற்படுத்தி தருமாறு கூறினார்கள். அவர்கள் மறுத்தனர்.
இதையடுத்து, எழுத்துப்பூர்வமாக வருவாய் துறை சார்பில், பழனி கிருஷ்ணா அவென்யூவுக்கு கிழக்கு பகுதியில் உள்ள தோட்ட உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், 'நிரந்தர தீர்வு ஏற்படும் வரை மழைநீர் செல்ல தற்காலிகமாக வழி விட வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
போலீஸ் பாதுகாப்போடு பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, தனியார் தோட்டத்திலிருந்த மண்மேடுகள் அகற்றப்பட்டன. 'மண்மேடுகளை அகற்றினால் தோட்டத்து பயிர்களுக்குள் மழை நீர் புகுந்துவிடும்; பயிர்கள் அழுகி விடும்' என்று, உரிமையாளர்களான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் மண்மேடுகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, தேங்கியிருந்த மழை நீர் வெளியேறத் துவங்கியது. இதை கண்டித்து விவசாயிகள் 15 பேர், கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.