/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடி, மின்னலுடன் கன மழை; வெள்ளத்தில் மிதந்த கோவை! 10 வீடுகள் இடிந்தன; 66 நிவாரண முகாம்கள் தயார்
/
இடி, மின்னலுடன் கன மழை; வெள்ளத்தில் மிதந்த கோவை! 10 வீடுகள் இடிந்தன; 66 நிவாரண முகாம்கள் தயார்
இடி, மின்னலுடன் கன மழை; வெள்ளத்தில் மிதந்த கோவை! 10 வீடுகள் இடிந்தன; 66 நிவாரண முகாம்கள் தயார்
இடி, மின்னலுடன் கன மழை; வெள்ளத்தில் மிதந்த கோவை! 10 வீடுகள் இடிந்தன; 66 நிவாரண முகாம்கள் தயார்
ADDED : அக் 13, 2024 10:35 PM

கோவை : கோவையில் நேற்று இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதில், ஐந்து தாலுகாக்களில்பத்து ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.கோவை நகரின் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
கோவையில், நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் மழை பெய்யத் துவங்கியது. தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதிகளில் பெரும் இடியுடன் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. பகலில், காலை 11:30 மணிக்கு மீண்டும் துவங்கிய மழை, நகரப் பகுதியில் பிற்பகல் 3:30 மணிக்கு தீவிரமடைந்துஇடி, மின்னலுடன் 5:30 மணி வரை கொட்டித் தீர்த்தது.
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கணுவாய், சின்னத்தடாகம், ஆனைகட்டி, குருடம்பாளையம் பகுதிகளில் தொடர் மழையால், சங்கனுார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வருவாய் துறையினரால் அழைத்து செல்லப்பட்டனர். வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னுார், பேரூர், மதுக்கரை தாலுகாக்களில் கனமழையால்,10 ஓட்டு வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. குடிசை வீடுகளும் சரிந்தன.
வீடுகளை இழந்த மக்கள், வருவாய்த்துறையினரால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் பிரிவு தாசில்தார் சரவணன் தலைமையிலான குழுவினர், வீடு இடிந்த பகுதிகளில் பார்வையிட்டனர்.
குளங்களில் ஆய்வு
மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையிலான மீட்பு படையினர்,உக்கடம் பெரியகுளம், வாலாங் குளம், செல்வசிந்தாமணி, குறிச்சி, சிங்காநல்லுார், வெள்ளக்கிணர்குளங்களை ஆய்வு செய்து, கரைப்பகுதிகள் திடமாக இருப்பதை உறுதி செய்தனர். பெரும்பாலான குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
செல்வசிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர், வெள்ளம் தேங்கிய பகுதிகளைப் பார்வையிட்டு, வெள்ளநீர் வெளியேற்றப்படுத்துவதை துரிதப்படுத்தினர்.
லங்கா கார்னர், கிக்கானி பள்ளி உள்ளிட்ட இடங்களில் தேங்கிய நீரை, மாநகராட்சி ஊழியர்கள் மோட்டர் வாயிலாக வெளியேற்றினர்.
வெள்ளத்தில் மூழ்கிய பஸ்
கோவை நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில சாலைகளில் 2 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்தது.
சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தில், தனியார் பஸ் வெள்ளத்தில் சிக்கியது. பயணிகள் பாதிப்பின்றி மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து, தடுப்பணைகள் நிறைந்தன.
மின்தடை
வடகோவை, ராம்நகர், ரேஸ்கோர்ஸ்பகுதிகளில் டிரான்ஸ்பார்மரிலிருந்த பீங்கான், மழை காரணமாக வெடித்துதீப்பிடித்ததால் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மழையை பொருட்படுத்தாமல்மின்வாரியத்தினர் துரிதமாக மின்இணைப்பை சரிசெய்தனர்.
66 நிவாரண முகாம்கள்
கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
கடந்த மாதமே பருவமழையை எதிர்கொள்வது குறித்து சிறப்புக்கூட்டம் நடத்தி, அறிவுரை வழங்கியுள்ளோம். அந்தந்த தாலுகாக்களில் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும், மிகுந்த கவனத்துடன் வருவாய் மற்றும் பேரிடர்த்துறை பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழைக்கு ஓட்டுவீடு இடிந்து விழுவது, கூரை வீடுகள் சரியும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும், 1077 அவசர உதவி எண் மற்றும் 0422-2301114 ஆகிய எண்கள் மழை பாதிப்பு தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ளன.
துணை கலெக்டர் அந்தஸ்தில் 2 அதிகாரிகள் தலைமையில், இரு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 66 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.