/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றுடன் கனமழை; வெள்ளம் சூழ்ந்தது; மரம் சரிந்ததால் மக்கள் பாதிப்பு
/
காற்றுடன் கனமழை; வெள்ளம் சூழ்ந்தது; மரம் சரிந்ததால் மக்கள் பாதிப்பு
காற்றுடன் கனமழை; வெள்ளம் சூழ்ந்தது; மரம் சரிந்ததால் மக்கள் பாதிப்பு
காற்றுடன் கனமழை; வெள்ளம் சூழ்ந்தது; மரம் சரிந்ததால் மக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 07, 2025 08:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல பகுதிகளில் மரங்கள் விழுந்து, தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்தது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த, 4ம் தேதி கனமழை பெய்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம், காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், மதியம் கருமேகம் திரண்டு காணப்பட்டது.
இரவு, 7:45 மணிக்கு, பலத்த காற்று வீசியது. 20 நிமிடம் காற்று மட்டுமே வீசியதால், பொள்ளாச்சி மகாலிங்கபுரம், அரசு கல்லுாரி மாணவர் விடுதி ரோடு, ஊஞ்சவேலம்பட்டி, செல்லமுத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கனமழை பெய்தது.
சூளேஸ்வரன்பட்டி, தேர்நிலையம், பாலக்காடு ரோடு, ராசக்காபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில், சாலையில் வழிந்தோடிய வெள்ளம் காரணமாக, கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள், பயணிக்க முடியாமல் திணறினர்.
பைக்கில் பயணித்தவர்கள், ரோட்டோரத்தில் ஆங்காங்கே உள்ள கடைகளில் தஞ்சம் புகுந்தனர். அதேநேரம், பணி முடிந்து கிராமப்பகுதிகளுக்குவீடு திரும்பியவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பல வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனிடையே மின்வெட்டும் ஏற்பட்டது. தெப்பக்குளம் வீதியை ஒட்டிய சாலையில், கால்வாய் அடைப்பு காரணமாக, மழை வெள்ளத்துடன் கழிவுநீர் வெளியேறியது.
பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் சாலையில் பரவியதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்தாலும், காற்றுடன் பெய்த மழையால் மக்கள் திணறினர்.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு - 10, பரம்பிக்குளம் - 2, ஆழியாறு - 27, மேல்நீராறு - 12, காடம்பாறை - 9, மேல்ஆழியாறு - 11, துணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 3, நவமலை - 13, பொள்ளாச்சி - 53 என்ற அளவில் மழை பெய்தது.