/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது
/
வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது
வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது
வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது
ADDED : மே 26, 2025 04:55 AM

தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் வால்பாறை சின்னக்கல்லாரில், 137 மி.மீ., மழை பெய்துள்ளது.
வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு விடிய,விடிய சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில எஸ்டேட்களில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால், அந்தப்பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
தொடர் மழையால் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர்நிலைகளில் சுற்றுலா பயணியர் குளிக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். ஆற்றோரப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு கருதி வால்பாறை நகரில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் திரண்டுள்ள சுற்றுலா பயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
பேரிடர் மீட்புக்குழுவினர் முகாம்
பருவமழையின் போது, இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் வால்பாறையில் முகாமிட்டுள்ளனர். இது தவிர நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழை பாதிப்புக்களை தவிர்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வால்பாறை டி.எஸ்.பி., ஸ்ரீநிதி ஆகியோர் மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை நேரில் ஆய்வு செய்தனர். அதன் பின் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர்.
உடுமலை
உடுமலை பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால், சீதோஷ்ண நிலை 'குளுகுளு'வென மாறியுள்ளது; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக உடுமலை பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. பகலிலும் வெயில் இல்லாமல், வானம் மேகமூட்டத்துடனேயே இருந்தது. சாரல் மழையும் இடைவெளி விட்டு பெய்தது.
கோடை வெயிலுக்கு விடை கொடுத்து, 'குளுகுளு' சீசன் துவங்கியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நகரத்தின் சில பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல் தேங்கியது. பழநி ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், அவ்வழியாக சென்ற பாதசாரிகள் அவதியடைந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அதிக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதில், கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் பின் பகுதியில் உள்ள கலைவாணர் வீதியில், குடியிருப்புகளுக்கு நடுவே இருந்த பெரிய புளிய மரம் மழைக்கு சாய்ந்தது.
இதில், அங்கு இருந்த மின் கம்பம் சாய்ந்து மின் ஒயர்கள் அறுந்தது. இதில், அப்பகுதி மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், அங்கு ரோட்டின் நடுவே மரம் சாய்ந்ததால் அவ்வழியாக வாகனங்கள் சென்ற வர முடியாத நிலை ஏற்பட்டது.
கிணத்துக்கடவு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த, பெரிய மரத்தின் கிளை முறிந்து புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், கடைகள் மீது விழுந்தது.
இந்த இரண்டு சம்பவங்களும் இரவு நேரத்தில் நடந்ததால், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனைமலை
ஆழியாறு அன்பு நகரில், நேற்று பலத்த காற்று வீசியதால், ரோட்டோரம் இருந்த மரம் ஒன்று, வேரோடு சாய்ந்தது. இதில், அவ்வழியே சென்ற கார் மீது மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதித்தது.
மரக்கிளைகள் நடுவே சிக்கிக் கொண்ட காரை, இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த, ஆழியார் போலீசார், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, கார் மீது விழுந்து கிடந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீராக்கினர்.
போலீசார் கூறுகையில், 'மழையின் போது, வாகனங்களை இயக்கும்போது, மிகுந்த கவனம் தேவை. காற்று வீசும்போது, மரத்தின் கீழே அல்லது அருகே வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
- நிருபர் குழு -