/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாதையில் முன்னெச்சரிக்கை நெடுஞ்சாலைத்துறையினர் 'அலர்ட்'
/
மலைப்பாதையில் முன்னெச்சரிக்கை நெடுஞ்சாலைத்துறையினர் 'அலர்ட்'
மலைப்பாதையில் முன்னெச்சரிக்கை நெடுஞ்சாலைத்துறையினர் 'அலர்ட்'
மலைப்பாதையில் முன்னெச்சரிக்கை நெடுஞ்சாலைத்துறையினர் 'அலர்ட்'
ADDED : மே 24, 2025 07:03 AM

வால்பாறை : வால்பாறை மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகரி, ஏற்காடு, கொடைக்கானல், ஏலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பருவமழையின் போது, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
வால்பாறை மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், பாதுகாப்பான முறையில் வாகனங்கள் சென்று வர வசதியாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான கொண்டை ஊசி வளைவுகளில், 42 இடங்களில்'ரோலர் சேப்டி பேரியர்' அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, விபத்துகள் அதிகளவில் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், மலைப்பாதையில் மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளன.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை அதிகாரிகள் குழு கண்டறிந்தால், அதன் பின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, கூறினர்.
மாற்றுப்பாதை இல்லை
வால்பாறையிலிருந்து அட்டகட்டி, ஆழியாறு வழியாக பொள்ளாச்சி செல்ல ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளது. மானாம்பள்ளி வழியாக பொள்ளாச்சி செல்ல மாற்று வழிப்பாதை உள்ளது. ஆனால், அந்த ரோடு போக்குவரத்துக்கு பயன்பாடின்றி உள்ளது. வனத்துறையினர் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இந்த ரோடு அமைந்துள்ளதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாலும், மானாம்பள்ளி ரோடு மாற்று வழியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாது என்பதில் வனத்துறையினர் உறுதியாக உள்ளனர்.