/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்புழு உரம் பயன்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை
/
மண்புழு உரம் பயன்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : செப் 26, 2025 09:37 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களில் மண்புழு உரம் பயன்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 16 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. இதில், அதிகப்படியான விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பயிர்களுக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்காது. குறிப்பிட்ட சில சத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.
இதை தவிர்த்து மண் புழு உரத்தை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். மண்புழு உரத்தில், தலைச்சத்து, மணிச்சத்து, போரான் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது. எந்தெந்த பயிருக்கு எவ்வளவு மண்புழு உரம் இடவேண்டும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதில், மரவள்ளிக்கிழங்கு ஒரு ஏக்கருக்கு, 250 கிலோ மண்புழு உரத்தை அடியுரமாக இட வேண்டும். அதன் பின், 90வது மற்றும் 150வது நாளில், 250 கிலோ உரம் இட வேண்டும். ஒரு ஏக்கர் வாழைக்கு, அடியுரமாக 500 கிலோவும், 90 மற்றும் 180 நாட்கள் கழித்து, 250 கிலோ மண்புழு உரம் இட வேண்டும்.
ஒரு ஏக்கர் மிளகாய் மற்றும் கத்தரிக்காய் பயிருக்கு, 250 கிலோ உரம் இட வேண்டும். மேலும், 60 நாட்கள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை மூன்று முறை பிரித்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.