/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் வரையாடுகள் எவ்வளவு இருக்கு? கண்டறிய கணக்கெடுப்பு துவங்கியது
/
வனப்பகுதியில் வரையாடுகள் எவ்வளவு இருக்கு? கண்டறிய கணக்கெடுப்பு துவங்கியது
வனப்பகுதியில் வரையாடுகள் எவ்வளவு இருக்கு? கண்டறிய கணக்கெடுப்பு துவங்கியது
வனப்பகுதியில் வரையாடுகள் எவ்வளவு இருக்கு? கண்டறிய கணக்கெடுப்பு துவங்கியது
ADDED : ஏப் 24, 2025 10:45 PM

பொள்ளாச்சி, ; தமிழக - கேரளா மாநிலங்கள் இணைந்து, நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கப்பட்டது.
தமிழகத்தில், மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இதன் நடமாட்டத்தை காண முடிகிறது.
இந்நிலையில், தமிழக அரசு, 25 கோடி ரூபாயில், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டம் கடந்தாண்டு துவங்கப்பட்டது. கடந்தாண்டு முதல் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, 1,031 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கி நான்கு நாட்கள் நடக்கின்றன. ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியாறு மாங்கரை சுற்று பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஒரு வனவர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர் என மூவர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் கூறியதாவது:
தமிழகம் - கேரள மாநிலம் இணைந்து, இரண்டாம் ஆண்டு ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் வரும், 27ம் தேதி வரை, மொத்தம் நான்கு நாட்கள் நடக்கின்றன.
தமிழகத்தில் உள்ள, 14 வனக்கோட்டங்களில், 43 வனச்சரகங்களில், 176 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி கோட்டத்தில், 32, திருப்பூர், 22, கோவை, 5 என மொத்தம், 59 இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது.
கிராஸ்ஹில்ஸ் பகுதியில் மட்டும் இரண்டு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு குழு சென்ற பின், அரை மணி நேரம் கடந்து மற்றொரு குழு ஆய்வு செய்யும். அவர்கள் மாலையில் சந்தித்து வரையாடுகளை பார்த்தது, குறிப்பெடுத்த விபரங்களை ஆய்வு செய்து சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், எல்லையோர கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கால்தடம், எச்சம், நேரில் பார்ப்பதை ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக, பதிவு செய்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆண், பெண் நீலகிரி வரையாடுகள், குட்டிகள் எண்ணிக்கை கண்டறிய வேண்டும்.
அவற்றுக்கு ஏதாவது கட்டி, நோய் தாக்குதல் உள்ளதா என்பது குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். பைனாகுலோர் கொண்டும் கணக்கெடுக்கப்படுகிறது. வரையாடுகளுக்கு ஏதாவது தொந்தரவுகள், வெளிநாட்டு தாவரங்கள் உள்ளிட்டவை குறித்து கண்டறிய தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.