/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்கள் கக்கும் புகையில் கார்பன் அளவு எவ்வளவு? இனி, சுங்கச்சாவடிகளில் கண்டறிய புது திட்டம்
/
வாகனங்கள் கக்கும் புகையில் கார்பன் அளவு எவ்வளவு? இனி, சுங்கச்சாவடிகளில் கண்டறிய புது திட்டம்
வாகனங்கள் கக்கும் புகையில் கார்பன் அளவு எவ்வளவு? இனி, சுங்கச்சாவடிகளில் கண்டறிய புது திட்டம்
வாகனங்கள் கக்கும் புகையில் கார்பன் அளவு எவ்வளவு? இனி, சுங்கச்சாவடிகளில் கண்டறிய புது திட்டம்
ADDED : செப் 04, 2025 11:20 PM

கோவை: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, கோவையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில், நிர்ணயித்த அளவை விட கார்பன் அளவு அதிகமாக இருக்கிறதா என கண்டறிய மாசு கட்டுப்பாடு வாரியம் திட்டமிட்டுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நுாற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் வந்து செல்கின்றன. வாகனங்கள் பெருக்கத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், அவை கக்கும் புகையால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது.
வாகனங்களின் ஆயுட்காலத்தை கடந்து இயக்கப்படும்போதோ அல்லது குறிப்பிட்ட கால இடை வெளியில் சர்வீஸ் செய்யாமல் இயக்கப்படும்போதோ, அவற்றில் இருந்து வெளியேறும் கரும்புகை காற்றை மாசுப்படுத்துகிறது; இது, மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது. சுவாசப் பிரச்னையை உண்டாக்கும்.
வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மக்களிடம் தெளிவான புரிதலை உருவாக்கவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. கோவையில் உள்ள ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் முன்னோட்ட அடிப்படையில், கார்பன் உமிழ்வை கண்காணிக்கும் முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம், கணியூர் சுங்கச்சாவடியில் துவக்கப்படுகிறது. கோவையில் இருந்து அவிநாசி, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சுங்கச்சாவடியை கடந்தே செல்லும்.
அப்போது, ஒவ்வொரு வாகனத்தில் இருந்தும் வெளியாகும் புகை, அதில் கலந்துள்ள கார்பன் உள்ளிட்ட மாசு கழிவுகள், காற்றில் பரவியுள்ள புகை மாசு அளவு கண்டறியப்படும். கார்பன் அளவு அதிகமாக இருக்கும் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இது, தமிழக அரசின் முன்மாதிரி திட்டம். முதல்கட்டமாக, கோவை மாவட்டத்தில் கணியூர் சுங்கச்சாவடியில் செயல்படுத்த உள்ளோம். பின், ஒவ்வொரு சுங்கச்சாவடியாக செயல்படுத்தப்படும்.
வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் அளவு கண்டறிந்து, அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் வாயிலாக, கார்பன் உமிழ்வு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, சூழல் பாதுகாக்கப்படும்' என்றனர்.