/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எப்படி ஏற்பாடு? வீடுதோறும் ரேஷன் சப்ளை வழிகாட்டுதலுக்கு காத்திருப்பு
/
எப்படி ஏற்பாடு? வீடுதோறும் ரேஷன் சப்ளை வழிகாட்டுதலுக்கு காத்திருப்பு
எப்படி ஏற்பாடு? வீடுதோறும் ரேஷன் சப்ளை வழிகாட்டுதலுக்கு காத்திருப்பு
எப்படி ஏற்பாடு? வீடுதோறும் ரேஷன் சப்ளை வழிகாட்டுதலுக்கு காத்திருப்பு
ADDED : ஜூலை 26, 2025 11:54 PM

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எதிர்பார்த்து, கோவை மாவட்ட அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால், ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்கள் வாங்க முடியாத சூழல் இருக்கிறது. உதவியாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். அவர்களது சிரமத்தை போக்க, வீடு தேடிச் சென்று வினியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டது.
சில இடங்களில் பரீட்சார்த்த முறையில், வேனில் கொண்டு சென்று வழங்கப்பட்டது. இம்முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும், 16 லட்சம் கார்டுதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது; இத்திட்டத்தை ஆக., 15ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக, மாவட்ட உயரதிகாரிகள் கூறியதாவது:
மூத்த குடிமக்கள் விபரம் தேர்தல் பிரிவிலும், மாற்றுத்திறனாளிகள் விபரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிலும் இருக்கின்றன. மாவட்ட அளவில், ஒவ்வொரு தாலுகாவிலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் வசிக்கின்றனர், அவர்களது முகவரி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
நடமாடும் வாகனங்களில் பொருட்கள் கொண்டு சென்று வழங்க வேண்டும். இதற்கென வாகனங்கள் தயார் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் அனைத்து பொருட்கள் வழங்கும் வகையில், ஒதுக்கீடு செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, மகளிர் குழு என மூன்று பிரிவினர் ரேஷன் கடைகளை நடத்துகின்றனர். வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்கும் சேவையை யார் மூலம் செயல்படுத்துவது என்பன போன்ற செயல் நடைமுறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
நடமாடும் வாகனத்துக்கு தனியாக விற்பனை முனைய கருவி ஒதுக்கி, ஊழியர்கள் நியமிக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும், 'ரூட் மேப்' உருவாக்கி, நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு பொருட்கள் வினியோகிக்க வேண்டும் என, முடிவெடுக்க வேண்டும்.
பொருட்கள் கொண்டு செல்லும் நாளன்று, அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்; அதற்கு முன், அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக, விவாதிக்கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து அறிவுறுத்தல் எதிர்பார்த்திருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.