/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலுவான, ஸ்திரமான கட்டடம் அமைத்துக்கொள்வது எப்படி?
/
வலுவான, ஸ்திரமான கட்டடம் அமைத்துக்கொள்வது எப்படி?
ADDED : ஜன 06, 2024 12:37 AM

நாம் பார்த்து, பார்த்து கட்டும் வீட்டை வலுவாகவும், ஸ்திரமாகவும் அமைத்துக்கொண்டால், நமக்கு மட்டுமல்லாமல், நமது சந்ததிகளுக்கும் பயனளிக்கும்.
அதை எவ்வாறு அமைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து, கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியளர்கள் சங்கம் (காட்சியா) செயற்குழு உறுப்பினர் பிரதேஸ்பிரசன்னா கூறியதாவது:
மரங்களுக்கு வேர் போல, நமது கட்டடத்துக்கு அஸ்திவாரம் மிக பெரிய ஆதாரமாகும். உதாரணமாக, களிமண் நிலத்தில் கெட்டியான மண் கிடைக்கும் வரை, குழி எடுக்க வேண்டும். அதன் ஆழம் குறைந்தது, 6 முதல் 8 அடியாக இருக்க வாய்ப்பு உள்ளது.
அதுவே செம்மண் நிலத்தில், ஆழம் 4 முதல் 5 அடிக்குள் முடிந்துவிடும். இவ்வாறு நாம் கட்டி வரும் வரை எடுத்து, அஸ்திவாரம் அமைக்கும் போது நமக்கு நமது கட்டடம் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும். பிளிந்த் பீம் அமைக்கும் போது, பொதுவாக பீம் கீழ் பகுதியில் வெறும் செங்கற்கள் வைத்து அதன் மேல் கம்பி கட்டி கான்கிரீட் போட்டு விடுவார்கள். இதனால் நிலத்தில் மண் அரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆகையால் காலம் முதல் காலம் வரை, நிலத்தில் ஒரு அடி ஆழம் பறித்து தான் அடியில் பி.சி.சி., எனப்படும் மெட்டல் மற்றும் சிமென்ட் மணல் சேர்த்து, கான்கிரீட் போட்டு அதன் மீது, கம்பி கட்டி பிளிந்த் பீம் அமைத்து, பின் அதன் மீது அஸ்திவாரம் அமைத்தல் நலம்.
அஸ்திவாரத்திற்க்கு கிராவல் எனும், கிணற்று மண் கொட்டி, நன்கு தண்ணீர் ஊற்றி கெட்டிப்படுத்தினால், அஸ்திவாரத்திற்கு நல்ல பலம் கிடைக்கும்.
அஸ்திவாரத்தில் கட்டுமான வேலை முடிந்தவுடன், உள் பகுதியில் சிமென்ட் பூச்சு செய்து பின்பு மண் நிரப்பினால், கூடுதல் சிறப்பு. கிராவல் மண் வாங்கும் பொது, அதில் பெரிய கற்களும் கட்டியும் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
வீட்டைச்சுற்றி பள்ளம் இல்லாமலும், சுற்றுச்சுவர் கட்டி உள்ளும் புறமும் மண் கொட்டி மேடேற்றி அதன் மேல், புளோரிங் போட்டு பாதுகாப்பது நலம்.
பேஸ்மென்ட் உயரமாக இருக்கும், மனையின் மேற்பரப்பில் இருந்து நிலம் குறைந்தது 3 முதல் 4 அடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மழை நீர், வீட்டுக்குள் வருவதை தடுக்க முடியும்.
மொட்டைமாடியில் இருக்கும் தண்ணீரும், வீட்டை சுற்றி வரும் தண்ணீரும் முழுமையாக ஒரு இடத்தில் வந்து சேரும் படி, பார்த்துக்கொள்ள வேண்டும்.
அந்த இடம் ஈசானிய பாகமாக இருந்தால் நலம். அங்கு தான் நாம் தண்ணீர் தொட்டி அமைப்போம். அங்கு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, வரும் நீரை அதில் சேர்த்து விட்டால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கு நன்மை பயக்கும்.
வீட்டின் வெளிப்புறத்தில் குறைந்தது, 2 அடி இடைவெளி விடவேண்டும், மேலும் நமது அஸ்திவாரத்திலிருந்து 2 அடிக்கு பிளிந்த் ப்ரடக்சன் எனப்படும் முறையை நாம் பின்பற்ற வேண்டும். இதனால் நமது வீட்டை சுற்றி, மழை பெய்தாலும் அந்த நீரானது, நமது சுவரில் பட்டு ஓதம் ஏறாது. இதனால் வீட்டின் உள்ளும் புறமும், நீர் கசியாமல் இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.