UPDATED : நவ 25, 2026 06:44 PM
ADDED : நவ 25, 2026 06:44 PM
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்போது, அந்த வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைப்பதை வாய்தா என்று அழைக்கப்படுகிறது. வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 309 விரிவாக எடுத்துரைக்கிறது.
நீதிமன்றம் முன்னிலையில் இருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில், ஒவ்வொரு வழக்கையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதும் பட்சத்தில் ஒத்திவைக்கலாம். அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள், 376- ன் கீழ் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து, இரண்டு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று புதிய சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு, விசாரணை துவக்குவதை தள்ளி வைப்பது அவசியமானது என்ற முடிவுக்கு கோர்ட் வருமானால், நிபந்தனைகள் அடிப்படையில் தள்ளி வைக்கலாம். ஆனால், சாட்சிகள் வந்திருந்தால் காரணமில்லாமல் தள்ளி வைக்ககூடாது.
வழக்கு தரப்பினரின் வக்கீல், மற்றொரு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி கொண்டிருக்கிறார் என்பதை காரணம் காட்டி, வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கும்படி கோர முடியாது. தகுந்த காரணம் இருந்தால் நீதிமன்றம் வழக்கை 15 நாட்களுக்கு மேல் ஒத்தி வைக்ககூடாது.
தகுந்த காரணம் என்பது வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் அல்லது வல்லுநரின் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது அல்லது முக்கியமான சாட்சியை அழைத்து விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்பன போன்றவை.
வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற நிலையில் தான் வாய்தா வழங்கப்பட வேண்டும்.
