/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடுகளை வாகனத்தில் கொண்டு செல்ல வழிமுறை
/
மாடுகளை வாகனத்தில் கொண்டு செல்ல வழிமுறை
ADDED : ஜன 13, 2025 12:11 AM
மேட்டுப்பாளையம்,; 'விவசாயிகள், கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் தொழில் செய்வோர் ஆகியோரை, அழைத்து கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக, கோவை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது, 24 மணி நேரத்திற்குள்ளாக தகுதியான கால்நடை மருத்துவரிடம், கால்நடைகள் ஆரோக்கியமாக உள்ளது என உடல் தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
நோயுற்ற, உடல் ஊனமுற்ற, பார்வையற்ற, புதிதாக கன்று ஈன்ற 72 மணி நேரத்திற்குள்ளாக கன்று ஈனும் நிலையிலுள்ள, கால்நடைகளை ஏற்றிச் செல்லக்கூடாது. சினையாக உள்ள கால்நடைகள் மற்றும் இளம் வயது கால்நடைகளையும் ஒன்றாக வாகனத்தில் ஏற்றிச் செல்லக்கூடாது.
142 இன்ச் உள்ள வாகனத்தில் கன்றுடன் 5 கால்நடைகளையும், கன்றில்லாமல் 6 கால்நடைகளையும் வாகனத்தில் ஏற்றிச் செல்லலாம்.
கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும்போது, குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஓய்வு அளித்து, தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.
கால்நடைகளை வாகனங்களில் காற்றோட்டமாகவும், சரியான இடைவெளியுடனும் ஏற்றிச் செல்ல வேண்டும். கால்நடைகளை எவ்வித வதையும் செய்யவில்லை என உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய சான்று வழங்க வேண்டும். பராமரிக்க ஒரு உதவியாளர் மற்றும் முதலுதவி பெட்டி வாகனத்தில் இருக்க வேண்டும்.
தரைதளத்தில் 5.6 செ.மீ அளவு வைக்கோல் நிரப்பியிருக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, காரமடையில் உள்ள ஸ்ரீ பகவத் ராமனுஜர் கோசாலை பராமரிப்பாளர் சடகோப ராமனுஜ தாசன் கூறுகையில்,
''காரமடை அருகே மாதப்பனுாரில், எங்களது கோசாலை உள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்ட வயதான, நோய்வாய்ப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகள் சேவை மனப்பான்மையுடன் இலவசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கலெக்டரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது,'' என்றார்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், 'விவசாயிகள் மற்றும் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் தொழில் செய்வோர் ஆகியோரை, அழைத்து கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அதன் பின், மறு பரிசீலனை செய்து அறிக்கை விட வேண்டும்,' என்றனர்.