/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாயங்கால வேளை ஆதார் பதிவுக்கு வந்தால் சோர்வில்லை
/
சாயங்கால வேளை ஆதார் பதிவுக்கு வந்தால் சோர்வில்லை
ADDED : ஜூன் 02, 2025 11:32 PM
கோவை : தலைமை தபால் நிலையங்களில், ஆதார் பதிவுக்கு வருவோர், கூட்டம் அதிகமாக இருக்காத மாலை நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவை பெற, ஆதார் எண் அவசியமாகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் சார்பிலும், தனியார் சார்பிலும் ஆதார் மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 40 சதவீதத்துக்கு மேலான ஆதார் பதிவுகள், தபால் துறையின் கோவை கோட்டத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தபால் நிலையங்களில், ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலைமை தபால் நிலையங்களில், காலை 8:00 முதல் மாலை 8:00 மணி வரை ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், ஆதார் பதிவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒரு நாளுக்கு 120 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், பெரும்பாலானோர் காலை நேரங்களிலேயே வந்து விடுவதால், கூட்டம் அதிகரிக்கிறது. ஆனால், மாலை 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை, ஆதார் பதிவுக்கு சொற்ப எண்ணிக்கையிலேயே, பொதுமக்கள் வருகின்றனர்.
பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிகளில் பயில்வோர் என பல்வேறு தரப்பினர், மாலை வேளையில் இங்கு வந்து, சிறிது நேரத்திலேயே எவ்வித சிரமமும் இல்லாமல், ஆதார் பதிவை முடித்துக் கொள்ளலாம். காலை நேரத்தை போன்று காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படாது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.