/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜாதகம் பாத்தாச்சு... சிபில் ஸ்கோர் பாத்தீங்களா!
/
ஜாதகம் பாத்தாச்சு... சிபில் ஸ்கோர் பாத்தீங்களா!
ADDED : டிச 01, 2024 01:16 AM
மணமகன் மணமகளுக்கு ஜாதகம் பார்த்து ராசியும், லக்னமும் ஒத்து போனா மட்டும் பத்தாதுங்க.. மாப்பிள்ளையோட சிபில் ஸ்கோர் சரியாக இருக்கணுமாம். இ.எம்.ஐ., யு.பி.ஐ., ஏதாவது தகராறு இருந்தா இனி கடன் மட்டும் இல்ல, பொண்ணு கிடைக்கறதும் கஷ்டம்தான் என வேடிக்கையாக சொல்கிறார் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜீதேந்திரன். கல்வி கடன் மற்றும் சிபில் ஸ்கோர் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜீதேந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
கல்விக்கடன் என்பது மாணவர்களின் உரிமை. மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி சாதாரண கலை பாடப்பிரிவுகளுக்கும் கல்விக்கடன் பெற முடியும். ஆதார், பான் கார்டு, இருப்பிட சான்று, சாதிச்சான்று போன்ற அடிப்படை சான்றிதழ்கள் மட்டுமே கல்விக்கடனுக்காக பெறப்படுகிறது.
இதை ரெடியாக வைத்துக்கொண்டு வீடு அல்லது கல்லுாரி அருகில் இருக்கும் வங்கியை அணுகலாம். அல்லது, வித்யா லட்சுமி போர்டலில் மூன்று வங்கிகளுக்கு ஒரே சமயத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தால் மேலும் செயல்பாடுகள் எளிமையாகும்.
கல்விக்கடன் பெறுபவர்களில் பலர் சரியாக திருப்பி செலுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு சிபில் சார்ந்த விழிப்புணர்வு இல்லாமல், மாணவர்கள் எதிர்காலத்தில் சிரமப்படும் சூழல்களையும் காண்கிறோம்.
சிபில் என்பது என்ன?
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமே 'சிபில்'. இந்நிறுவனம், கம்பெனி, தனிநபர்களின் கடன் சார்ந்த செயல்பாடுகளை கண்காணித்து 300 முதல் 900 வரை மதிப்பெண்களை நிர்ணயிக்கின்றது. வங்கிகள் தற்போது இதன் அடிப்படையில் தான் கடன்களை வழங்க சம்பந்தப்பட்டவர்கள் தகுதியானவர்களா என்பதை உறுதி செய்கின்றோம். சிபில் ஸ்கோர் நாம் வாங்கும் கடன், அதை திரும்ப செலுத்தும் ஒழுங்கு முறை, நகைக்கடன், பிற தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்கள், கடன் அட்டை பயன்படுத்தும் விதம், எத்தனை முறை எதெற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர் என அனைத்தும் ஆய்வு செய்தே இம்மதிப்பெண்களை நிர்ணயிக்கின்றது.
ஒரு சிலர் இதுகுறித்த விழிப்புணர்வு இன்றி கல்விக்கடனை பெற்று, அதை சரியாக திரும்ப செலுத்தாமல் விடுகின்றனர். இதனால், எதிர்காலத்தில் படிப்பு முடிந்து தொழில் ஆரம்பித்தாலோ, வாகனம் வாங்கினாலோ, வீட்டுக்கடன் விண்ணப்பித்தாலோ சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். கல்விக்கடன் வாயிலாக படித்து பலர் தற்போது பெரிய பதவிகளில் உள்ளனர். அதுபோன்று, அதை பயன்படுத்தி வாழ்கையில் முன்னேறிக்கொள்ளவேண்டும். சிபில் ஸ்கோர் என்பது 600க்கு மேல் இருப்பது ஏற்புடையதாக கருதப்படுகிறது.
தவிர, ஒரு சில மாநிலங்களில் திருமணத்திற்கு சிபில் ஸ்கோர் பெண் வீட்டினர் ஜாதகம் பார்ப்பது போல் ஆய்வு செய்ய துவங்கிவிட்டனர். அதனை எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்பதால், அனைவரும் சிபில் செயல்பாடுகளில் கவனமாக இருக்கவேண்டும். நிதி ஒழுக்கம் என்பது ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட ஒழுக்கம், பொறுப்புணர்வை வெளிப்படுகிறது என்று விளக்கினார்.