/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுத்தீ பரவினால் அதிகாரிகள் போனில் அலாரம் அடிக்கும்! வனம் காக்க கைகொடுக்கும் மொபைல் செயலி
/
காட்டுத்தீ பரவினால் அதிகாரிகள் போனில் அலாரம் அடிக்கும்! வனம் காக்க கைகொடுக்கும் மொபைல் செயலி
காட்டுத்தீ பரவினால் அதிகாரிகள் போனில் அலாரம் அடிக்கும்! வனம் காக்க கைகொடுக்கும் மொபைல் செயலி
காட்டுத்தீ பரவினால் அதிகாரிகள் போனில் அலாரம் அடிக்கும்! வனம் காக்க கைகொடுக்கும் மொபைல் செயலி
ADDED : பிப் 14, 2024 10:46 PM
பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு தீ பரவலை கண்டறிந்து தடுக்க, 'பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா' ஆப் பயன்படுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ, பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது.
வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, வேட்டை தடுப்பு காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது, வனத்தில் கடும் வறட்சி நிலவ துவங்கியுள்ளதால், மரங்கள், செடி மற்றும் கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், ஆறுகள் போன்ற நீராதாரமிக்க பகுதிகளும் வறண்டு வருகின்றன.
இனி வரும் நாட்களில், வறட்சியின் தாக்கம் அதிகரித்து, வனத்தில் காட்டு தீ பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காட்டுத்தீயை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புலிகள் காப்பகத்தில், தேவையான இடங்களில், ஒன்றரை மீட்டர், 3 மீ., மற்றும் 6 மீ., அகலத்தில், பல நுாறு கி.மீ., துாரத்துக்கு, ஆங்காங்கே, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தீயை அணைக்க, தற்காலிக தீத்தடுப்பு காவலர்கள், நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேநேரம், எப்.எஸ்.ஐ., (பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா) ஆப் பயன்படுத்தி, காட்டு தீ பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வனவர் முதல், கள இயக்குனர் வரை, இந்த 'ஆப்' பில், தனது மொபைல் எண்ணை உள்ளீடு செய்து வைத்துள்ளனர்.
காட்டு தீ பரவுவது 'சாட்டிலைட்' வாயிலாக கண்டறியப்பட்டு, அந்த பகுதி வன ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி சென்றடையும். அதன் வாயிலாக, தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தீயை விரைவாக அணைத்தால் மட்டுமே, வனத்தையும், வனத்திலுள்ள பல்லுயிர்களையும் பாதுகாக்க முடியும் என்பதால், வனத்துறையினர் களப்பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன் கூறுகையில், 'காட்டு தீ பரவலை எதிர்கொள்ள தயாராகும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காட்டுத்தீ பரவும் அபாயமுள்ள பகுதிகளில், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எப்.எஸ்.ஐ., ஆப் வாயிலாக, காட்டு தீ பரவல் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

