/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொஞ்ச காலம் போனால் பூங்காவை தேடணும்! புதரில் மறைந்ததால் அதிருப்தி
/
கொஞ்ச காலம் போனால் பூங்காவை தேடணும்! புதரில் மறைந்ததால் அதிருப்தி
கொஞ்ச காலம் போனால் பூங்காவை தேடணும்! புதரில் மறைந்ததால் அதிருப்தி
கொஞ்ச காலம் போனால் பூங்காவை தேடணும்! புதரில் மறைந்ததால் அதிருப்தி
ADDED : ஆக 22, 2025 11:34 PM

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் பல கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவை புதர் சூழ்ந்து இருப்பதால், சுற்றுலா பயணியர் விரக்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், நகராட்சி சார்பில், அ.தி.மு.க. ஆட்சியில் 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் கடந்த, 2022ம் ஆண்டு வால்பாறை தாவரவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஆனால், பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தேவையான எந்த அடிப்படை வசதியும் நகராட்சி சார்பில் செய்துதரப்படவில்லை.
இதனிடையே, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக முறையாக பராமரிக்கப்படாததால், பூங்காவை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், காலை நேரத்திலேயே பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன. மாலை நேரத்தில் புதரில் சிறுத்தை பதுங்கி, மக்களை அச்சுறுத்துகிறது.
தி.மு.க., ஆட்சியில் அவசர கோலத்தில் பூங்கா திறக்கப்பட்டதால், பூச்செடிகள் கூட மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. புதரில் மறைந்து கிடக்கும் பூங்காவால் மக்களும், சுற்றுலா பயணியரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
புதரால் அச்சம் பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறையில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர். பூங்காவை காண வரும் போது, பூங்காவில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததாலும், சுற்றிலும் செடிகள் காடு போல் வளர்ந்து புதராக காட்சியளிப்பதாலும், உள்ளே செல்வதில்லை.
புதரில் பாம்பு, சிறுத்தை இருப்பதால், குழந்தைகள் முதல் முதியவர் வரை பூங்காவினுள் செல்ல அச்சப்படுகின்றனர். இதே போல் படகு இல்லமும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக, பூங்கா மற்றும் படகு சவாரியை மீண்டும் துவக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மழையால் பாதிப்பு நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தொடர் மழையால், பூங்காவை பராமரிப்பதிலும், செடிகளை வெட்டுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு பின் சேதமான விளையாட்டு உபகரணங்கள் மாற்றியமைக்கப்படும். பூங்காவை சுற்றியுள்ள புதர் உடனடியாக அகற்றப்படும்.
இதே போல், படகு இல்லத்தை துார்வாரிய பின் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக படகுசவாரி விரைவில் துவங்கப்படும்' என்றனர்.