/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒட்டுப் போட்டு இயக்கும் அரசு பஸ்களை காயலாங்கடையில் போட்டால் கிடைக்கும் சக்கரை சேவு!
/
ஒட்டுப் போட்டு இயக்கும் அரசு பஸ்களை காயலாங்கடையில் போட்டால் கிடைக்கும் சக்கரை சேவு!
ஒட்டுப் போட்டு இயக்கும் அரசு பஸ்களை காயலாங்கடையில் போட்டால் கிடைக்கும் சக்கரை சேவு!
ஒட்டுப் போட்டு இயக்கும் அரசு பஸ்களை காயலாங்கடையில் போட்டால் கிடைக்கும் சக்கரை சேவு!
UPDATED : மார் 04, 2024 09:21 AM
ADDED : மார் 04, 2024 12:41 AM

கோவை:'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில், கவுண்டமணியின் பழைய சிவப்பு காரை பார்த்து, 'ஈயம் பித்தளைக்கு சக்கரை சேவு...' என காமெடி நடிகர் கூறுவார். கோவையில் இயக்கப்படும் பல அரசு டவுன் பஸ்களை பார்த்தால், இந்த காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது!
சென்னைக்கு அடுத்த படியாக, வளர்ந்த நகரம் என்று பெருமையாக கோவை பேசப்படுகிறது. பிற விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும், ஏழை மக்களின் போக்குவரத்துக்கு உதவும் டவுன் பஸ்களை பொருத்தவரையில், கோவையின் நிலை பரிதாபம்தான். இவற்றில் பயணிக்கும் பயணிகள் வேறு வழியின்றி, நொந்து நுாலாகின்றனர்.
கோவையில், 422 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்பகுதிகளுக்கு, அரசு பஸ்களே அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதில் பல பஸ்கள், பழுதாகி வழியில் நிற்பதும், பயணிகள் அவதிக்குள்ளாவதும் தொடர்ந்து வருகிறது.
அரசு பஸ்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். ஆனால் 15 ஆண்டுகள் முடிந்து, காலாவதியாகியும் 'மேக்கப்' போட்டு தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இதனால், இந்த பஸ்கள் ரேடியேட்டர், பிரேக், இன்ஜின், மேற்கூரை சேதமடைந்து பழுதாகி, பாதி வழியில் நின்று விடுகின்றன. அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டிய பயணிகள், சேர்ந்து தள்ளினால் சில பஸ்கள் ஸ்டார்ட் ஆகும். பெரும்பாலான பஸ்கள் படுத்து விடும்.
போக்குவரத்துக்கழக நிர்வாகத்தையும், மக்களின் வேதனையை புரிந்து கொள்ளாத அரசையும் திட்டியபடி, வேறு வழியின்றி வேறு பஸ், டாக்சி, ஆட்டோ பிடித்து பயணிகள் அலுவலகத்துக்கு தாமதமாக செல்கின்றனர்.
கோவையிலுள்ள செம்மேடு, சென்னனுார், பெருமாள் கோவில்பதி, சுல்தான்பேட்டை, சூலுார் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள், அவ்வப்போது பழுதாகி நிற்கும் அவலம் தொடர்கிறது.
இலவசம்தானே என்று, இந்த பாடாவதி பஸ்களை நம்பி பயணிக்கும் பெண்களின் பாடுதான் பரிதாபம். வீட்டில் சமையலை முடித்து, பிள்ளைகள், கணவனை அனுப்பி விட்டு, அரக்க பரக்க வந்து ஏறி, இந்த பஸ்களில் பயணிக்கும் அவர்களின் டென்ஷன் வாழ்க்கையை, எளிதில் விவரிக்க முடியாது.
அதுவும், இந்த பஸ்களின் உயரமான படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதற்குள் பெண்களும், வயதானவர்களும், நோயாளிகளும் அனுபவிக்கும் சிரமம் சாதாரணமல்ல.
இது போன்ற பழுதான, பஸ்களை இயக்கும் ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். பஸ்களில் உள்ள பழுதுகளை, டெப்போ பொறியாளரிடம் தெரிவித்தால், அதற்கு போதுமான உதிரி பாகங்கள் இருந்தால் மாற்றித்தருவார்.
உதிரிபாகங்கள் இல்லாத நிலையில், வெல்டிங் அடித்தும், சிறு தகடுகளால் ஒட்டுப்போட்டும், தற்காலிகமாக ரெடி பண்ணித் தருவார்கள்.
வேறு வழியின்றி ஓட்டுனர் பஸ்சை ரோட்டுக்கு கொண்டு வருவார்.
'தடதட' என்ற ஊரைக்கூட்டும் சப்தத்துடன், ரோட்டில் நாம் அவ்வப்போது காணும் பஸ்கள் இந்த ரகம்தான். வேறு வழியின்றி, உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிகள், இந்த பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது.
பாதியில் பஸ்கள் நின்று விட்டாலும், விபத்தை சந்தித்தாலும் போக்குவரத்துக்கழக நிர்வாகம் கண்டுகொள்வது கிடையாது.
ஒட்டு போட்ட ஓட்டை பஸ்களை மாற்றினால்தான், வரும் தேர்தலில் ஓட்டு கிடைக்கும் என்பதை, ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது!

