/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலியிடத்தை பார்த்தாலே குப்பை மூட்டை வீசுவதா!
/
காலியிடத்தை பார்த்தாலே குப்பை மூட்டை வீசுவதா!
ADDED : செப் 01, 2024 11:10 PM

1. குவியும் குப்பை
ஆர்.எஸ்.புரம், திவான் பகதுார் ரோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான காலியிடத்தில் தொடர்ந்து குப்பையை சிலர் வீசுகின்றனர். மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுகளால் சுற்றியுள்ள பகுதியில், கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவண வேல், ஆர்.எஸ்.புரம்.
2. சாலையை மறைக்கும் புதர்
மதுக்கரை மார்க்கெட் - பாலத்துறை சாலையின் இருபுறமும், அடத்தியாக புதர் வளர்ந்துள்ளது. வளைவில் வரும் வாகனங்கள் தெரியாததால், விபத்து நடக்கிறது. புதரை அகற்றி சுத்தம் செய்வதுடன், விபத்தை தடுக்க வேகத்தடையும் அமைக்க வேண்டும்.
- பிரபு, மதுக்கரை மார்க்கெட்.
3. தெருவிளக்கு பழுது
மாச்சம்பாளையம், 94வது வார்டு, ராமசாமி கோனார் வீதியில், ' எஸ்.பி -12, பி -38' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- குணசேகரன், மாச்சம்பாளையம்.
4. விபத்திற்கு வாய்ப்பு
ஆவாரம்பாளையம் ரோடு, பாரதி காலனி மற்றும் சூர்யா கார்டன் திருப்பத்தில், கோ-இந்தியா அருகே, குடிநீர் வால்வு சாலையிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டுள்ளது. இது, வெறும் செடிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. வாகனஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.
- ரவீந்திரன், பாரதி காலனி.
5. குறுக்கே ஓடும் குதிரைகள்
மதுக்கரை சாலைகளில், பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் திடீரென குறுக்கே ஓடும் குதிரைகளால், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். உரிமையாளர்களிடம் புகார் செய்தும் எந்த பலனுமில்லை. உயிரிழப்புகள் நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோகுல், மதுக்கரை.
6. தலைக்கு மேல் காய்ந்த மரம்
கோவை நேரு ஸ்டேடியத்தில், பொதுமக்கள் அமரும் கேலரி அருகே பட்டுப்போன மரம் உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் ஆபத்தாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மரத்தை, பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
- ரவி, காந்திபுரம்.
7. குப்பையால் அடைப்பு
காந்திபுரம், எட்டாவது வீதியில், சாலையோரம் குப்பை குவிந்துள்ளது. அருகிலுள்ள கடைக்காரர்கள் சாக்கடையோரம் தொடர்ந்து அதிக குப்பை கொட்டுகின்றனர். குப்பை கால்வாயில் விழுவதால், சாக்கடையிலும் அடைப்பு ஏற்படுகிறது.
- ஸ்ரீநிவாசன், காந்திபுரம்.
8. மின்விபத்து அபாயம்
சரவணம்பட்டி ஊராட்சி, ஜெயா நகர் சிறுவர் பூங்காவில், பழுதடைந்துள்ள மின்சார மீட்டர் பெட்டி தரையில் சாய்ந்தபடி உள்ளது. பூங்காவிற்கு வரும் குழந்தைகள் தெரியாமல் தொடுவதற்கு வாய்ப்புள்ளது. உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
- ஸ்ரீநிவாசலு, சரவணம்பட்டி.
9. கருவேல மரங்களால் விபத்து
பி.என்.புதுார், ஜெகதீஸ் நகர், பொன்னுசாமி நகர் செல்லும் சாலையோரம், கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. பாதி சாலை வரை நீட்டிக்கொண்டிருக்கும் கருவேல மரங்களால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எதிரே வரும் வாகனங்களும் சரியாக தெரியாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- ரவீந்திரன், பொன்னுசாமி நகர்.
10. பயன்படுத்த முடியாத ரோடு
குறிச்சி, 97வது வார்டு, பாரத் பெட்ரோல் பங்க் பின்புறம், குறிச்சி ஹவுசிங் யூனிட் சிட்கோவில் இருந்து, மதுக்கரை சாலையை இணைக்கும் சாலை, மோசமாக சேதமடைந்துள்ளது. வாகனஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள, இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
- சந்தோஷ், குறிச்சி.
11. கடும் துர்நாற்றம்
ஆவாரம்பாளையம், பாலாஜி நகரில், பாதாள சக்கடையில், குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கும் அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- லதா, பாலாஜி நகர்.
12. திக்...திக்...பயணம்
சிங்காநல்லுார் அருகே, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவகத்துக்கு பின்புறம் போயர் வீதியில், ஆணையங்காடு ரோடு செல்லும் வழியில், சாக்கடை சிலேப் உடைந்துள்ளது. சாலை நடுவே குழியாகவும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தினமும் பயத்துடன் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
- இளஞ்செல்வி, சிங்காநல்லுார்.