/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு; மக்களிடையே விழிப்புணர்வு தேவை
/
பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு; மக்களிடையே விழிப்புணர்வு தேவை
பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு; மக்களிடையே விழிப்புணர்வு தேவை
பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்பு; மக்களிடையே விழிப்புணர்வு தேவை
ADDED : நவ 14, 2024 08:46 PM

பொள்ளாச்சி ; வீதிகளில் அலட்சியமாக வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்த்தலும் பிரதானமாக உள்ளது. அதேபோல, நகர் பகுதியிலும் சிலர், பால் உற்பத்திக்காக கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், புற்கள் இல்லாததால், மேய்ச்சலுக்காக, ஆங்காங்கே அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த கால்நடைகள், தெருக்களிலும், சாலையோரத்திலும் குவிந்து கிடக்கும் குப்பையில் உணவை தேடி அலைகின்றன.
குப்பையில் உள்ள, மக்காத பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு, குடல் அழற்சி நோயால் பாதிக்கின்றன. இதற்கு, நகரின் பல பகுதிகளில், அலட்சியப் போக்குடன் செயல்படும் மக்கள், பிளாஸ்டிக் கழிவுகளை திறந்த வெளியில் வீசுவதே காரணமாகும். உணவைத் தேடி அலையும் கால்நடைகள், குப்பையைக் கிளறி பிளாஸ்டிக் கவர்களில் இருக்கும் உணவு பொருட்களை உட்கொள்ளும் போது, பிளாஸ்டிக் கழிவையும் விழுங்கி விடுகின்றன.
அவை, வயிற்றுக்குள் உணவு செல்லும் பாதையை அடைத்துக் கொள்வதுடன், ஜீரணமாகாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால், கால்நடைகளால் உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, வயிறு வீக்கம் அடைந்து, பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னையில் இருந்து தீர்வு காண, பொதுமக்களிடம் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கவர் உள்ளிட்டவைகளை சாலையோரம், தெருக்கள், குப்பைமேட்டில் வீசக்கூடாது. வீடுகள் மற்றும் கடைகளில், அவற்றை தனியே பிரித்து வைத்து, குப்பை சேகரிக்க வரும் துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கால்நடை வளர்ப்போர், மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது, உரிய கண்காணிப்புடன் இருக்க வேண்டும். சாதாரண காகிதத்தை சாப்பிடும்போது, கால்நடைகளுக்கு பாதிப்பு இருக்காது. அதேநேரம், மக்காத பிளாஸ்டிக் போன்றவற்றை சாப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், கால்நடைகளைப் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.