/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓராண்டில், 677 பேருக்கு காசநோய்
/
ஓராண்டில், 677 பேருக்கு காசநோய்
ADDED : மார் 25, 2025 12:30 AM

கோவை:
கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனை சார்பில், நடத்தப்பட்ட பரிசோதனையில், 677 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆண்டுதோறும், உலக காசநோய் தினம், மார்ச், 24 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் மருத்துவமனை ஊழியர்கள், நர்ஸ்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.காசநோய் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் நாடகம் வாயிலாக ஏற்படுத்தினர்.
நெஞ்சக நோய் துறைத்தலைவர் கீர்த்திவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:கடந்த ஓராண்டில், மருத்துவமனையில், 17 ஆயிரத்து 343 நோயாளிகளுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 677 நோயாளிகளுக்கு காசநோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அனைவருக்கும் முறையான சிகிச்சை வழங்கப்பட்டது.தமிழக காச நோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ், 677 பேரில் நோய் தீவிரத்தன்மை கண்டறியப்பட்ட, 110 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நீக்சய் ஷிவிர் முகாம் வாயிலாக அரசு மருத்துவமனை சார்பில் ரயில்வே ஸ்டேஷன் ஊழியர்கள், மத்திய சிறை கைதிகள், நர்சிங் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முகாம் வாயிலாக, 8,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 14 பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.