/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோர்ட் தபால் நிலைய சேவை அதிகரிப்பு : மேலும் ஒரு உதவியாளர் தேவையாம்'
/
'கோர்ட் தபால் நிலைய சேவை அதிகரிப்பு : மேலும் ஒரு உதவியாளர் தேவையாம்'
'கோர்ட் தபால் நிலைய சேவை அதிகரிப்பு : மேலும் ஒரு உதவியாளர் தேவையாம்'
'கோர்ட் தபால் நிலைய சேவை அதிகரிப்பு : மேலும் ஒரு உதவியாளர் தேவையாம்'
ADDED : நவ 24, 2025 06:31 AM

கோவை: கோவை கோர்ட் துணை தபால் நிலையத்துக்கு, தபால் அனுப்ப வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக ஒரு தபால் உதவியாளர் நியமிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 1960ம் ஆண்டு முதல், கோவை கோர்ட் கட்டடத்தில், துணை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு போஸ்ட் மாஸ்டர், தபால் உதவியாளர் மற்றும் ஜி.டி.எஸ்., பேக்கர் என மூவர் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கறிஞர்கள், பிற மாநிலங்கள், மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு, சம்மன் மற்றும் நோட்டீஸ்களை, பதிவு தபால் வாயிலாக அனுப்புவது வழக்கம்.
கடந்த வருடம் ஏப். 1 முதல் நடப்பாண்டு மார்ச் 31 முடிந்த காலகட்டத்தில், இங்கிருந்து, 87 ஆயிரம் பதிவு தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன. கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில், அதிகபட்சமாக, பதிவு மற்றும் விரைவு தபால்கள் அனுப்பக்கூடிய அலுவலகமாக, கோர்ட் தபால் நிலையம் விளங்கி வருகிறது.
கடந்த அக்.1ம் தேதியில் இருந்து பதிவு தபால் நீக்கப்பட்டு விரைவு தபால் மட்டுமே அமலில் இருக்கும் நிலையில், தினந்தோறும், 400க்கும் மேற்பட்ட விரைவு தபால்கள், இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. தவிர, 20 ஆயிரம் மதிப்புக்கு தபால் தலைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
தாமதத்தை குறைக்கும் வகையில், கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் நடவடிக்கையால், இங்கு 'தெர்மல் பிரின்டர்' வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒரே நேரத்தில் 50 தபால்கள் பதிவு செய்தாலும், ஒரே நிமிடத்தில் அதற்கான ரசீது வழங்கப்படுகிறது.
தற்போது விரைவு தபால் அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக ஒரு தபால் உதவியாளரை பணியமர்த்தி, கூடுதலாக ஒரு தெர்மல் பிரின்டர் அமைக்க ஏற்பாடு செய்தால், பணிகளின் வேகம் அதிகரித்து, இங்கு பணிபுரிபவர்களுக்கும் சிரமம் இருக்காது என, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

